நாட்டை திறக்கும்போது பஸ் ஊழியர்கள், பயணிகள் பின்பற்ற விதிகள்

நாட்டை திறக்கும்போது பஸ் ஊழியர்கள், பயணிகள் பின்பற்ற விதிகள்-Regulations for Passengers-Bus Drivers & Conductors

- சாரதி, நடத்துனருக்கு 2 தடுப்பூசிகளும் கட்டாயம்

தற்போது நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம், ஒக்டோபர் 01 ஆம் திகதி அதிகாலை முதல் நீக்கப்படும் நிலையில், தனியார் பஸ்களில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் பேருந்துகளில் பணிபுரியும் சாரதி, நடத்துனர்கள் கொவிட் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் பெற்றிருப்பது கட்டாயமாகும் என்று அமைப்பின் தலைவர் நிலந்த ஏக்கநாயக்க கூறினார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் நீக்கப்படுகின்ற எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து, வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் ஒழுங்குபடுத்தலின் கீழுள்ள பேருந்துகளின் செயல்பாடு குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

பேருந்து ஊழியர்கள் மற்றும் பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயப் படுத்தப்பட்டுள்ளதுடன், பஸ் நடத்துனரே அதற்கு பொறுப்பாக இருக்க வேண்டும். ஆசன எண்ணிக்கைகளுக்கு அமைய மாத்திரமே பயணிகள் பயணிக்க வேண்டும். அரச மற்றும் தனியார் துறைகளில் பணி புரிகின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அத்துடன், கூடுதலான கட்டணம் அறவிடக் கூடாது. பேருந்துகளில் யாசகம் பெறுவது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் இந்த விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பேருந்தில் வெற்றிலை மெல்லுதல் மற்றும் புகைப்பிடித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது. அதன் முழுப் பொறுப்பும் நடத்துனருக்கே உள்ளது. இந்த புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கண்காணிப்பதில் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் பரிசோதகர்கள் நாடுபூராகவும் சிவில் உடையில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அத்துடன், கொவிட் தொற்று பரவல் காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களைக் கருத்தி கொண்டு, அவர்களுக்காக போக்குவரத்து அமைச்சினால் ரூ. 50,000 பெறுமதியுள்ள வருடாந்த நிவாரண பொதி முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் செயல்படும் பேருந்துகளும் சுகாதார அறிவுறுத்தல்களை முறையாக நடைமுறைப்படுத்தி போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென தெரிவித்துள்ளது.