நாட்டை திறந்த பின் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வேலைத்திட்டங்கள்

நாட்டை திறந்த பின் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வேலைத்திட்டங்கள்-After Opening the Country-Plans for Tourist

இலங்கையின் சுற்றுலாத் தொழில்துறையினை மேம்படுத்துவதில் புதியதொரு திருப்பமாக நாட்டில் பல இடங்களை பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, நாட்டை திறந்த பின்னர் வருகை தருகின்ற சுற்றுலாப் பயணிகளுக்காக மத்திய கலாசார நிதியத்தின் தயார் நிலை குறித்து பொதுமக்களை அறிவுறுத்தும் ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே செயலாளர் இதனை தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் சுற்றுலாத்துறையினூடாக நாளொன்றுக்கு 10-20 மில்லியன் ரூபாய்கள் வருமானமானது மத்திய கலாசார நிதியத்திற்கு கிடைத்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மற்றும் கொவிட் தொற்று காரணமாக சுற்றுலாத்துறையானது சரிவினை எதிர்நோக்க, வருமானமும் குறைந்தது.

சுற்றுலா பயணிகளின் மனங்கவர்ந்த பல இடங்கள் மத்திய கலாசார நிதியத்தின் கீழ் பராமரிக்கப்படுகின்றன. கொவிட் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு மீள நாடு வழமையான நிலமைக்கு திரும்பியதன் பின்னர் சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்காக வேண்டி அவ்விடங்களை பாதுகாத்து மற்றும் அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள மகுல் மடு விகாரையினை அபிவிருத்தி செய்தல் மற்றும் கிழக்கு மற்றும் தெற்கு கடற்கரையில் நீரில் மூழ்கி (டைவிங் செய்து) இலங்கையின் உரிமைகளை கண்டுகளிப்பதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தும் டைவிங் திட்டமானது அவற்றில் மிகவும் விசேடமானது எனவும் செயலாளர் தெரிவித்தார்.

புதுறுவகலை வரலாற்று சிறப்பு வாய்ந்த சிலையினை கண்டுகளிப்பதற்காக வருகைத் தருகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக இருவழி போக்குவரத்து வீதியொன்றை அமைத்துள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்க தெரிவித்தார்.

பிரதேசத்தின் வனப்பினை நன்றாக பார்வையிடுவதற்கு ஏற்றாற் போல் புதுறுவகலை வாவியின் ஊடாக படகின் மூலம் புதுறுவகலை புனித பூமிக்கு நுழைவதற்கான அபிவிருத்தி திட்டமொன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். 

திருகோணமலை பாதுகாப்பு கோட்டையில் அமைந்துள்ள இரகசியமான கதவின் ஊடாக பயணித்து கோட்டையின் அழகை பார்வையிடுவதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு சந்தர்ப்பத்தினை வழங்குவதற்கான திட்டமொன்றும் சிவில் பாதுகாப்பு படையணி மற்றும் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அலவல பிரதேசத்திலுள்ள பண்டைய வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரணசிங்க மேலும் தெரிவித்தார். 

உலக மரபுரிமைகளான அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய நகரங்களுக்கு இடையிலுள்ள ரிடிகல தொல்பொருள் தளத்தினை உலக மரபுரிமையாக மாற்றுவதற்கு அவசியமான ஆவணங்களை தயார்படுத்திக் கொண்டிருப்பதாகவும் விரைவில் குறித்த ஆவணங்களை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதற்காக ஒப்படைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

வாசிப்பு மாதத்தில் வாசகர்களுக்காக விசேட கழிவுடன் புத்தகங்களை விற்பனை செய்வதற்காக விசேட திட்டமொன்றை மத்திய கலாசார நிதியமானது ஆரம்பித்துள்ளதாக கலந்துரையாடலில் கலந்து கொண்ட மத்திய கலாசார நிதியத்தின் ஊடக பணிப்பாளர் லலித் உதே~ மதுபானு தெரிவித்தார்.

மெய்நிகர் (online) முறையில் ஏராளமான வரலாற்று, தொல்பொருள், கட்டிடக்கலை புத்தகங்களை சலுகை விலையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வு, குழந்தை இலக்கியம், மொழிபெயர்ப்பு, வழிகாட்டல்கள் புத்தகங்களை போன்று வரலாற்று அம்சங்களை உள்ளடக்கிய வரைப்படங்கள், புகைப்படங்கள், அஞ்சல் அட்டைகள், சுவரொட்டிகள், வரலாறு மற்றும் தொல்பொருள் தொடர்பாக எழுதப்பட்ட சிங்களம், ஆங்கிலம் போன்ற ஏராளமான புத்தகங்களை அவற்றுள் உள்ளடங்குகின்றன.

பெட்டாலியன் தேசிய சாயல் பாடசாலையினால் நிர்மாணிக்கப்பட்ட விசேட வகையிலான பிரதிமைகள் (replica) மற்றும் பல்வேறு கலை படைப்புகளையும் மெய்நிகர் (online) முறையில் கொள்வனவு செய்யலாம். மத்திய கலாசார நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலமாகவோ அல்லது 0774874081, 0710581723 எனும் தொலைப்பேசி இலக்கங்களிற்கு அழைப்பினை மேற்கொள்வதன் மூலமாகவோ அல்லது வட்ஸ்அப் குறுந்தகவலொன்றை அனுப்புதன் ஊடாகவோ அவற்றினை பெற்றுக் கொள்ளலாம்.

கொள்வனவு செய்யப்பட்ட திகதியிலிருந்து வாரத்தில் பணிபுரிகின்ற 04 நாட்களுக்குள் வீட்டிற்கே குறித்த பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் எனவும்  வீட்டுக்கு கொண்டுவரும் முகவரிடம் பகிர்ந்தளிப்பதற்கான பணத்தினை செலுத்த முடியும் எனவும் உதேஷ மதுபானு மேலும் தெரிவித்தார்.