ஒரே நாளில் பிரபலமான இந்தியாவின் ஐ.நா பிரதான செயலாளர் ஸ்னேகா துபே

Sneha Dubey India-UN

ஐநா அவையில் நடந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியும் இந்தியாவின் ஐநா பிரதான செயலாளருமான ஸ்னேகா துபே பாகிஸ்தானுக்கு எதிராக பேசிய விதம் இணையம் முழுக்க கவனம் பெற்றுள்ளது. அவரின் இந்த பேச்சை விட பேச்சுக்கு பின்பாக அவைக்கு வெளியே அவர் நடந்து கொண்ட விதம்தான் அதிக பாராட்டுகளை பெற்றுள்ளது.

இந்திய பிரதமர் மோடி ஐநாவில் நேற்று உரையாற்றினார். தற்போது ஐநாவின் 76வது பொது கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் இதில் நடைபெற்ற நிலையில் அனைத்து உறுப்பு நாடுகளும் கலந்து கொண்ட முக்கியமான கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் இந்தியா சார்பாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியும் இந்தியாவின் ஐநா பிரதான செயலாளருமான ஸ்னேகா துபே ஐஎஃப்எஸ் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் ஸ்னேகா துபே பேசியதுதான் தற்போது இணையம் முழுக்க அதிக கவனம் பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் ஆன்லைன் வாயிலாக கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் பிரச்சனை குறித்தும், இந்திய அரசின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் பேசினார். அவர் தனது உரையில், இந்தியாவில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக இல்லை. தங்கள் நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிராக இந்திய அரசு செயல்படுகிறது. காஷ்மீர் மக்களை இந்திய அரசு கொடுமைப்படுத்துகிறது. 370வது சட்ட பிரிவை நீக்கி காஷ்மீரின் சுதந்திரத்தை பறித்துள்ளது. இஸ்லாமியர்களுக்கு எதிராக மாபெரும் அரசு அங்கு ஆட்சியில் உள்ளது என்று அவர் பேசினார்.

இதற்கு இந்தியா சார்பாக பேசிய ஸ்னேகா துபே சரமாரியாக பதிலடி கொடுத்தார். அதில், பாகிஸ்தான் சர்வதேச தீவிரவாதிகளுக்கு இலவச பாஸ் கொடுக்கும் நாடாக இருக்கிறது. தீவிரவாதிகளுக்கு புகலிடமாக திகழ்ந்து வருகிறது. தங்களை எதோ நல்ல நாடு போல காட்டிக்கொண்டு தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது. பாகிஸ்தான் தங்கள் நாட்டில் தீவிரவாதத்திற்கு பயிற்சி அளிப்பதால்தான் உலக நாடுகள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன.

காஷ்மீர் குறித்து சர்வதேச மேடையில் பேச பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை. ஜம்மு காஷ்மீர் எப்போதும், எந்த காலத்திலும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும். பாகிஸ்தான் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து இருக்கும் காஷ்மீர் பகுதிகளும் கூட எங்களுக்குத்தான் சொந்தம் என்பதை மறக்க வேண்டாம். அந்த பகுதிகளை பாகிஸ்தான் உடனே காலி செய்ய வேண்டும். பாகிஸ்தான் முதலில் தங்கள் நாட்டில் இருக்கும் மத சிறுபான்மையினரை காக்க வேண்டும்.

பங்களாதேஷ் மக்களுக்கு பாகிஸ்தான் செய்த கொடுமைகளை மறக்க முடியுமா? அமெரிக்காவில் 9/11 தாக்குதலை நடத்திய பின் லேடன் பிடிபட்ட இடம் பாகிஸ்தான். பாகிஸ்தான்தான் அவருக்கு புகலிடம் வழங்கி இருந்தது. இப்போதும் கூட பாகிஸ்தான் அரசு அவரை ஒரு தியாகி, போராளி என்று அழைக்கிறது. அமெரிக்காவில் அவ்வளவு பெரிய தாக்குதல் நடத்தியவரை பாகிஸ்தான் தியாகி என்கிறது.

இப்படிப்பட்ட பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக பேசலாமா? சர்வதேச மேடை ஒன்றை பாகிஸ்தான் எப்போது தவறாக பயன்படுத்தி வருகிறது. இந்தியாவிற்கு எதிரான பொய்யான பிரச்சாரத்தை பரப்ப, தன் நாட்டின் மீது இருக்கும் தீவிரவாத அழுக்குகளை மறைக்க பாகிஸ்தான் ஐநா மேடையை தவறாக பயன்படுத்தி வருகிறது என்று ஸ்னேகா துபே பதிலடி கொடுத்தார். இவரின் இந்த பேச்சும், அவர் ஆங்கில சொற்களை கையாண்ட விதமும் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

இவரை இந்தியா முழுக்க மட்டுமின்றி அமெரிக்காவிலும் பலர் பாராட்டி வருகிறார்கள் . ஆப்கானிஸ்தானில் தாலிபான் வெற்றி காரணமாக பாகிஸ்தான் மீது கோபத்தில் உள்ள பல நாடுகள் இவரின் பேச்சை பாராட்டி வருகிறார்கள். இதனால் கடந்த இரண்டு நாட்களாக ஸ்னேகா துபே ட்விட்டரில் வைரலாக இருக்கிறார்.

இந்த பேச்சுக்கு பின் அவர் இணையத்தில் வைரலானார். இதையடுத்து ஐநா அவையில் அவர் தங்கி இருந்த பின் அறையில் அவரை பேட்டி எடுக்க ஊடக செய்தியாளர் ஒருவர் முயன்றார்.பாகிஸ்தான் குறித்து கொஞ்சம் ஏளனமான தொனியில் அந்த செய்தியாளர் கேள்வி எழுப்பினார். ஆனால் அமைதியாக ஸ்னேகா துபே பேட்டி கொடுக்க மறுத்துவிட்டார். ஆனால் தொடர்ந்து அந்த செய்தியாளர் அவரை தொந்தரவு செய்ததால் ப்ளீஸ் வெளியே போங்க என்று ஸ்னேகா துபே வாயில் கதவை காட்டினார். அவரின் இந்த செயல் இணையம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐநாவில் சிறப்பாக பேசினாலும் அதை தன்னுடைய தனிப்பட்ட புகழுக்காக இந்த பேச்சை பயன்படுத்தவில்லை என்று பலரும் ஸ்னேகாவை புகழ்ந்து வருகிறார்கள்.