பரவலான இடம்பெயர்வுக்கு மத்தியில் காபூலில் வீட்டு விலைகள் வீழ்ச்சி

பரவலான இடம்பெயர்வுக்கு மத்தியில் காபூலில் வீட்டு விலைகள் வீழ்ச்சி-Afghanistan House Price Down

ஆப்கானிஸ்தானை விட்டும் சில குடும்பங்கள் வெளியேறிவிட்டதோடு மற்றவர்கள் வெளியேற முயற்சிப்பதாக சொத்து ஆதன வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக வீட்டு வாடகை விலை 50 சதவீதம் குறைந்துள்ளது.

ஓகஸ்ட் 15ஆம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து காபூலில் ரியல் எஸ்டேட் விலைகள் மற்றும் வீட்டு வாடகை என்பன கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர்கள் டொலோ செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்துள்ளனர்.

வர்த்தகர்களின் கூற்றுப்படி, சொத்து விற்பனை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது மற்றும் வாடகை விலை 50 சதவிகிதம் குறைந்துள்ளது.

இந்த நாட்களில் மக்கள் வீடுகளை வாங்காததால் வியாபாரம் வெகுவாக குறைந்துவிட்டதாக அவர்கள் கூறினர், ஏனெனில் மக்களிடம் போதுமான பணம் இல்லை அல்லது நாட்டை விட்டு வெளியேற அவர்கள் முயற்சிக்கின்றனர்.

சில வீடுகள், வாடகைக்கு பெற்றவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதால் காலியாக உள்ளதாகவும் சொத்து ஆதன வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

காபூலில் உள்ள சொத்து ஆதன விற்பனை வர்த்தகரான முகமது யூசுப் கூறுகையில், கடந்த 13 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருவதாகவும், வீட்டு வாடகை விலை 50 சதவீதம் குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

"வீட்டு வாடகை விலைகள் சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு முன்பு ஒரு வீட்டை 20,000 ஆப்கானி க்கு வாடகைக்கு எடுத்திருந்தால், இப்போது அதன் வாடகை பெறுமதி 10,000 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் இடம்பெயர்வதால் எதிர்காலத்தில் விலைகள் மேலும் குறையும், மேலும் இங்கு வாழ மக்களுக்கு ஆர்வம் இல்லை ”என்று யூசுப் கூறினார்.

ஷஹ்ராக்-இ ஆரியா என்பது காபூலில் உள்ள ஒரு நவீன குடியிருப்பு நகரம். நகரில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் முன்னாள் அரசாங்க ஊழியர்களாவர். 50 சதவிகித குடியிருப்பாளர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.

"சுமார் 50 சதவிகித மக்கள் வெளியேறிவிட்டனர். இப்போது கிட்டத்தட்ட பாதி குடியிருப்புகள் காலியாக உள்ளன ”என்று நகர அதிகாரி முகமது மன்சூரி கூறினார்.

வேறு சில குடியிருப்பாளர்கள், வாடகை விலை குறைவதை வரவேற்றுள்ளனர். இங்கு வசிக்கும் கலிலுரஹ்மான் கூறியதாவது: வாடகை விலை குறைந்துள்ளது நல்ல செய்தி. ஆனால் நகர்ப்புறத்தில் வசிப்பவர்கள் அனைவரும் கடந்த அரசாங்க ஊழியர்கள்.அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மற்றும் மனிதாபிமான அமைப்புகளும் ஆப்கானிஸ்தானில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை குறித்து பலமுறை எச்சரித்துள்ளன.