ஈராக்கின் அரும்பொருளை திரும்பக் கொடுத்தது அமெரிக்கா

மனித சக்திக்கு அப்பால்பட்ட மன்னர் ஒருவரின் கதையைக் கூறும் ஈராக்கின் பண்டைய களிமண் பலகையை அமெரிக்கா அந்த நாட்டுக்கு உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது.

கில்கமேஷ் காவியத்தின் சுமேரிய கவிதையின் ஒரு பகுதியை கொண்ட 3600 ஆண்டுகள் பழமையான இந்த சமய நூல், கில்கமேஷ் கனவுப் பலகை என அழைக்கப்படுகிறது.

இது உலகின் மிகப் பழமையான இலக்கியப் படைப்புகளில் ஒன்றாக உள்ளது. 1991 ஆம் ஆண்டு வளைகுடா போரின்போது இந்த தொல்பொருள் ஈராக்கிய அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது.

கடந்த 30 ஆண்டுகளாக போலி ஆவணங்களுடன் பல நாடுகளுக்கு இந்தக் களிமண் பலகை கடத்தப்பட்டு வந்தது.

எனினும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க அரசாங்கத்தின் அருங்காட்சியத்தில் நிரந்தமாக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த அரும்பொருள் கடந்த வியாழக்கிழமை ஈராக்கிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

வடக்கு ஈராக்கில் உள்ள ஆசிரிய மன்னனின் அழிவடைந்த நூலகத்தில் இருந்து 1853 ஆம் ஆண்டு இந்த களிமண் பலகை 12 பாகங்களாக கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த பலகை ஆக்கடியன் மொழியில் எழுதப்பட்டுள்ளது.