அமெரிக்காஸ் வரலாற்றை மாற்றும் பண்டைய கால்தடம் கண்டுபிடிப்பு

முன்னர் நம்பப்பட்டதை விடவும் குறைந்தது 7,000 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதன் அமெரிக்காஸ் பிராந்தியத்தை அடைந்திருப்பதாக புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்கக் கண்டத்திற்கு ஆசியாவில் இருந்து மனிதன் எப்போது குடியேறினான் ஏற்பது பற்றிய விவாதம் நீண்ட காலமாக நீடித்து வருகிறது.

வட அமெரிக்காவின் உட்பகுதிகளில் 16,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் இருந்ததற்கான சான்றுகளை பல ஆராய்ச்சியாளர்களும் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் நியூ மெக்சிகோவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள குழு ஒன்று 23,000 தொடக்கம் 21,000 ஆண்டுகள் பழமையான குறிப்பிடத்தக்க அளவிலான மனிதக் கால்தடங்களை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு அந்த கண்டத்தில் மனிதன் எப்போது குடியேறினான் என்பது பற்றிய நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. எமக்குத் தெரியாத பெரும் குடியேற்றங்கள் இடம்பெற்றிருக்கக் கூடும் என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆரம்ப குடியேற்றங்கள் அழிந்திருக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது மட்டமான தளமாக மாறி இருக்கும் ஆழமற்ற ஏரியின் மென்மையான சேற்றில் இந்த கால் தடம் பதிந்திருப்பதாக ஜேர்னல் சயன்ஸ் சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.