தலிபான் தலைமைகள் இடையே பிளவு தீவிரம்

ஆப்கானிஸ்தானை கைப்பற்றி இருக்கும் தலிபான் தலைமைகளுக்கு இடையிலான பிளவு அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆப்கான் புதிய அரசின் பிரதிப் பிரதமராக நியமிக்கப்பட்ட முல்லா அப்துல் கானி பரதார் இந்த மாத தொடக்கம் முதல் பொது வெளியில் தோன்றாத நிலையில் அந்தக் குழுவின் ஒற்றுமை குறித்து ஆப்கான் பொதுமக்களிடை சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த சூழலில் பரதார் கொல்லப்பட்டதான செய்திகளும் வெளியாகி இருந்தன.

இதனைத் தொடர்ந்து அவரின் முன் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. பயணங்கள் காரணமாகவே தாம் பொது வெளியில் இருந்து விலகி இருந்ததாகவும் தலிபான்கள் ஒரு குடும்பத்தை விடவும் ஒற்றுமையாக இருப்பதாகவும் பரதார் அதில் குறிப்பிட்டிருந்தார்.

தலிபான்களின் அரசியல் - ஆயுதப் பிரிவுகளுக்கு இடையிலேயே பிளவு அதிகரித்திருப்பதாக தலிபான்கள் பற்றி கடந்த பல ஆண்டுகளாக செய்தி சேகரித்து வரும் செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கடும்போக்காளர்கள் '20 ஆண்டு போராட்டத்தில் அந்த அமைப்பு தமக்கு கடன்பட்டிருப்பதாக உணர்கிறார்கள்' என்று அந்த செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.