கொரிய போரை தீர்ப்பதற்கு வட கொரியா நிபந்தனைகள்

தென் கொரியாவுடன் பேச்சு நடத்தி, போரை அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாக வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன்னின் சகோதரி கிம் யோ-ஜொங் கூறியுள்ளார்.

கொரிய தீபகற்பத்தை இரண்டாகப் பிரித்த கொரியப் போர் 1953 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டாலும், அதிகாரப்பூர்வமாக சண்டை நிறுத்த அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்தப் போர் முடிவுற்றதாக அறிவிக்க வேண்டும் என்ற தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன், சில நாட்களுக்கு முன் அழைப்பு விடுத்திருந்தார்.

அதற்கு அறிக்கை மூலமாகப் பதிலளித்திருக்கும் கிம் யோ-ஜொங், சில நிபந்தனைகளையும் விதித்துள்ளார்.

வட கொரியாவுக்கு எதிரான விரோதக் கொள்கைகளைக் கைவிட வேண்டும், தவறான முன்முடிவுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பவை உள்ளிட்ட நிபந்தனைகளை அவர் விதித்துள்ளார்.

வட கொரியாவில் கிம் ஜொங் உன்னுக்குப் பின்னர் அவரது சகோதரி கிம் யோ ஜொங் அதிகாரம் மிக்கவராகக் கருதப்படுகிறார்.

“இரட்டை செயற்பாட்டு நடைமுறைகள், தர்க்கரீதியற்ற தப்பெண்ணம், மோசமான பழக்கங்கள் மற்றும் எமது தற்பாதுகாப்பு உரிமைக்கான செயற்பாடுகள் பற்றி தவறு கூறி தமது செயற்பாடுகளை நியாயப்படுத்தும் விரோத நிலைப்பாட்டை (தென் கொரியா) கைவிட வேண்டும்” என்று கிம் யோ ஜொங் குறிப்பிட்டுள்ளார்.

“இவ்வாறான முன்னிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டாலேயே நேருக்கு நேர் அமர்ந்து போரை முடிவுக்குக் கொண்டுவரும் அறிவிப்பை வெளியிட முடியும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மாத ஆரம்பத்தில் வட கொரியா ஏவுகணை சோதனை மேற்கொண்டு சில மணி நேரங்களின் பின் தென் கொரியாவும் தனது முதலாவது நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணையை சோதித்திருந்தது.

தென் கொரியா வருடாந்தம் அமெரிக்காவுடன் இணைந்து மேற்கொள்ளும் போர் பயிற்சியையும் வட கொரியா விமர்சித்து வருகிறது.