பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை: அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கவாஜா

இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா நேற்றுமுன்தினம் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

பாகிஸ்தானில் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட சென்று இருந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி கடைசி நேரத்தில் களம் இறங்க மறுத்ததோடு தொடரை இரத்து செய்து விட்டு அவசரமாக தாயகம் திரும்பியது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் பாகிஸ்தான் பயணத்தை அதிரடியாக ரத்து செய்தது.

பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி விலகுவதில், பாகிஸ்தானாக இருந்தால் எதிரணி வீரர்கள் முடியாது என்று எளிதில் சொல்லி பின்வாங்கி விடுகிறார்கள். பங்களாதேஷ் என்றாலும் அப்படி தான். இதே நிலைமை இந்தியாவில் காணப்பட்டால் நிச்சயம் விளையாட முடியாது என்று யாரும் சொல்லமாட்டார்கள். காரணம் பணம். அங்கு பணம் பேசும் என்பதை அனைவரும் அறிவோம். அனேகமாக அது தான் கிரிக்கெட்டை முடிவு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கிரிக்கெட் விளையாடுவதற்கு பாகிஸ்தான் பாதுகாப்பான இடம் என்று பாகிஸ்தான் அரசும், அந்த நாட்டு கிரிக்கெட் சபையும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து நிரூபித்துள்ளது. அதனால் நாங்கள் ஏன் அங்கு மீண்டும் சென்று விளையாடக்கூடாது? போட்டிக்கு பலத்த பாதுகாப்பு போடப்படுகிறது. அங்குள்ள மக்களும் பாதுகாப்புடன் இருப்பதாக உணர்க்கிறார்கள்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட்டில் விளையாடிய போது வீரர்களிடம் பேசியதில் இருந்து அவர்களும் கூட பாதுகாப்பு விஷயத்தில் திருப்தி தான் தெரிவித்தனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கலாம். ஆனால் இப்போது 100 சதவீதம் பாதுகாப்பு இருக்கிறது. அவுஸ்திரேலிய அணி அடுத்த ஆண்டு திட்டமிட்டபடி பாகிஸ்தான் சென்று விளையாடினால் (1998-ம் ஆண்டுக்கு பிறகு அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தான் சென்றதில்லை) மகிழ்ச்சி அடைவேன். 34 வயதான உஸ்மான் கவாஜா பாகிஸ்தானில் பிறந்தவர் ஆவார்.

அவருக்கு 5 வயது இருக்கும் போது குடும்பத்தினர் அவுஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்து அங்கு நிரந்தரமாக குடியேறிவிட்டனர். துடுப்பாட்ட வீரரான கவாஜா அவுஸ்திரேலிய அணிக்காக 44 டெஸ்ட் மற்றும் 40 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.