6 கி.கி. கஞ்சாவை கடத்த முற்பட்ட பொலிசார் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது

6 கி.கி. கஞ்சாவை கடத்த முற்பட்ட பொலிசார் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது-Police Arrest 3 Person Including a Police Officer in Possession of Cannabis

யாழ்ப்பாணத்தில் இருந்து 6 கிலோ கிராம் கஞ்சாவை காரில் மறைத்து வைத்துக்கொண்டு காரில் கொழும்பிற்கு கொண்டுசெல்ல முற்பட்ட மூவரை மாங்குளம் பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

நேற்று (24) மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சந்தேகத்திற்கிடமான காரொன்றை, ஏ9 வீதியில், மாங்குளம் பகுதியில் வைத்து சோதனையிட்ட போதே இவ்வாறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் உள்ளடங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புத்தளத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும், நெச்சியாகம பகுதியினை சேர்ந்த 25 வயதுடைய நபரும் யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

சந்தேகநபர்களிடம் வாக்குமூலம் பதிவுசெய்து, விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிசார், சந்தேகநபர்களை இன்றையதினம் (25) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

(புதுக்குடியிருப்பு விசேட நிருபர்)