அசாத் சாலியின் பிணைமனு வாபஸ்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியை பிணையில் விடுதலை செய்யக்கோரி அவரது சட்டத்தரணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிணை விண்ணப்பம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனையடுத்து அதனை நிராகரிப்பதற்கு கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மேற்படி மனு நேற்றைய தினம் நீதிபதி மஞ்சுள திலகரட்ண முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் போது சட்ட மாஅதிபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட சட்டத்தரணி வசந்த பெரேரா, பிரதிவாதிக்கு எதிராக கொழும்பு 02ஆம் இலக்க மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  அந்த நீதிமன்றத்தில் பிணை விண்ணப்பம் முன்வைக்கப்படுமானால் பிரதிவாதியை பிணையில் விடுவிப்பது தொடர்பில் தமது நிலைப்பாட்டை முன்வைப்பதற்கு சட்ட மாஅதிபர் தயாராகவுள்ளதாக அரச சட்டத்தரணி அதன்போது குறிப்பிட்டுள்ளார். அதன்போது உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ண அது தொடர்பில் தெரிவிக்கையில்:

பிரதிவாதி தொடர்பில் மற்றொரு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் அதனால் மேற்படி பிணை கோரிக்கையை தம்மால் கவனத்திற் கொள்ள முடியாதென்றும் தெரிவித்துள்ளார். சந்தேகநபரை பிணையில் விடுதலை செய்வது தொடர்பில் தேவையான அனுமதியை வழங்குவதற்கு சட்ட மாஅதிபர் கொள்கை ரீதியாக இணங்கியுள்ளதாக தாம் அறிவதாகவும் அதன்போது அசாத் சாலியின் சார்பில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தாம் அந்த பிணை கோரிக்கையை வாபஸ் பெறுவதாகவும் உரிய நீதிமன்றத்தில் மீண்டும் அதனை சமர்ப்பிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி தெரிவித்த தகவல் சம்பந்தமாக முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்