கொவிட் தொற்றினால் மாணிக்கக்கல் வர்த்தகம் பாதிக்கப்படப் போவதில்லை

கொரோனா தொற்றினால் நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் பல துறைகளும் முடங்கியுள்ளன. குறிப்பாக உல்லாசப் பயணக் துறையும் பாதிக்கப்பட்டதால் இரத்தினக்கல் வியாபாரத்திலும் பாரிய அடி விழுந்தது. ஆனால் இந்நிலையிலும் என்னைப் போன்ற ஒரு சிலரால் ஒன்லைன் மூலமாக மாணிக்க வர்த்தகம் தொடரப்பட்டதால் நாட்டுக்கு குறிப்பிடத்தக்க அந்நிய செலாவணி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது' என்று மாணிக்கக்கல் வர்த்தகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் 'ப்ரண்ட் லைன் ஜெம்' நிறுவன உரிமையாளரும் சீனன்கோட்டை விஸ்டம் சர்வதேச பாடசாலை முகாமைத்துவப் பணிப்பாளருமான அஷ்ஷெய்ஹ் எம்.எச்.எம் பௌஸர் நளீமி கூறினார். அவருடனான நேர்காணல் வருமாறு:

கேள்வி: சர்வதேச பாடசாலை ஒன்றை வழிநடத்தும் நீங்கள், மாணிக்க வர்த்தகத்திலும் ஈடுபடுகிறீர்களே?

பதில்: மாணிக்க வர்த்தகம் உள்ளிட்ட முன்னேற்றகரமான பல துறைகளுக்கும் ஆங்கில மொழி மிகவும் இன்றியமையாததொன்றாகும். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்தே ஆங்கில சர்வதேச பாடசாலையை நிறுவினேன்.

கேள்வி: பெரும்பாலான மாணிக்கக்கல் வியாபாரிகள் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு நீண்ட நாட்கள் தங்கியிருந்தே மாணிக்கக்கல் வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள். சர்வதேச பாடசாலை நடத்தும் உங்களால் இது சாத்தியமாகுமா?

பதில்: மடகஸ்கார், தன்சானியா, மொசாம்பிக் உள்ளிட்ட ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் இன்று மாணிக்கங்கள் கிடைக்கப் பெறுகின்றன. அதேபோன்று தொன்றுதொட்டு இலங்கையின் இரத்தினபுரி, எலஹர, கஹவத்தை போன்ற இடங்களிலும் மாணிக்கக்கற்கள் அகழ்ந்தெடுக்கப்படுகின்றன. எப்படியானாலும் இரத்தினபுரி இரத்தினங்களுக்கே உலக நாடுகளில் நல்ல கிராக்கி நிலவுகிறது. நானும் இரத்தினபுரியில் இருந்து மாணிக்கக் கற்களை கொள்முதல் செய்து வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கு விற்பனை செய்தே எனது வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்கிறேன்.

கேள்வி: இலங்கை மாணிக்கக்கற்கள் வெளிநாட்டவர்களால் கவரப்பட அவற்றில் உள்ள சிறப்பியல்பு என்ன?

பதில்: இங்கிலாந்து அரச குடும்ப திருமண வைபவங்களில் இலங்கையின் நீலநிற மாணிக்கக் கற்களே பரிமாறப்பட்டு வருகின்றன. அது இலங்கையின் காலனித்துவ ஆட்சிக் காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ள ஒரு சம்பிரதாயமாக இருந்து வருகிறது. இந்தப் பின்னணியிலேயே இலங்கையின் நீல நிற மாணிக்கம் செல்வாக்குப் பெற்றுள்ளது. அத்துடன் சிங்கள மன்னர் காலத்திலிருந்தே அரேபிய வர்த்தகர்கள் மத்தியிலும் இலங்கை மாணிக்கம் அன்பளிப்புப் பொருளாக இருந்து வந்துள்ளது.

கேள்வி: மாணிக்க வர்த்தகம் தொடர்பாக நீங்கள் வெளிநாடுகளுக்கு செல்வதில்லையா?

பதில்: அப்படிச் சொல்வதற்கில்லை. வெளிநாடுகளில் நடக்கும் மாணிக்க வர்த்தக கண்காட்சிகளில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர், ஐக்கிய அமெரிக்கா, பேங்க்கொக், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் உலகில் நன்மதிப்புப் பெற்ற இலங்கையின் மாணிக்கக் கற்களையே பிரதானமாக எடுத்துச் செல்வேன். எமது உள்நாட்டு மாணிக்கக் கற்களுக்கே நல்ல கிராக்கி நிலவும் போது அவற்றையே எனது பிரதான வர்த்தகப் பொருளாக கொண்டுள்ளேன்.

கேள்வி: உங்களது மாணிக்க கல் வர்த்தக அனுபவங்கள் மூலம் கூற விரும்பும் அறிவுரைகள் எவை?

பதில்: நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் துறைகளில் மாணிக்கக்கல் வர்த்தகமும் பிரதான பங்கு வகிக்கிறது. அதனால் இதனை ஊக்குவிக்க வேண்டும். வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு உள்ள சிரமங்கள், இடர்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும்.

கேள்வி: மாணிக்க வர்த்தகத்தில் ஈடுபடும் இளம் சந்ததியினருக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

பதில்: நவீன காலத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் மாணிக்க வர்த்தகத்திலும் தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு இத்தொழிலை முன்னெடுக்க வேண்டும். வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்துக் கொள்வதற்கு ஆங்கில மொழி அறிவு மிகவும் அவசியமாக உள்ளது. மாணிக்க வர்த்தகத்தில் வெட்டுதல், செப்பனிடல், மெருகூட்டல் போன்ற விடயங்களிலும் சிறந்த பயிற்சி, அறிவியல் நுட்பங்களை கற்றுக் கொண்டே இத்தொழிலில் இறங்க வேண்டும்.

பீ.எம்.முக்தார்
(பேருவளை)