கிழக்கு மாகாண கூட்டுறவு சங்கங்களில் கட்டுப்பாட்டு விலையில் பொருட்கள்

கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களிலும் தற்போது அரசாங்க கட்டுப்பாட்டு விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில், மாகாணத்திலுள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களில் தற்போது ஒரு கிலோ சீனி 125 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அரசாங்கத்தின் தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைவாக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருமான ஏ.எல்.எம்.அஸ்மி மேற்கொண்ட முயற்சியின் பலனாகவும், கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், கிழக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சின் செயலாளர் ஆகியோரின் ஒத்துழைப்புடனும் கிழக்கு மாகாணத்தில் உள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக அரசாங்க நிர்ணய விலையில் சீனி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சீனி தட்டுப்பாடு நிலவுகின்ற கொரோனா தொற்று இடர் காலத்தில் உடனடியாக செயற்பட்ட ஆணையாளர் அஸ்மி, கிழக்கு மாகாண பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு முதல் கட்டமாக 60 ஆயிரம் கிலோகிராம் சீனியையும், இரண்டாம் கட்டமாக இரண்டு இலட்சம் கிலோகிராம் சீனியையும் வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்.

இதனடிப்படையில் திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை ஆகிய நான்கு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் பிரிவுகளிலும் உள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு சீனி பகிர்ந்தளிக்கப்பட்டு தற்போது விநியோகிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களுக்குச் சென்று, சுகாதார வழிமுறைகளைப் பேணி சீனி உட்பட அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்து வருவதனை அவதானிக்க முடிகிறது.

தற்போதைய அசாதாரண சூழலில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களினூடாக சீனி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான ஏ.எல்.எம்.அஸ்மி, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், பிரதம செயலாளர், அமைச்சின் செயலாளர், கூட்டுறவு திணைக்கள அதிகாரிகள் ஆகியோருக்கு மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களமானது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப் பகுதியில் கூட்டுறவுச் சங்கங்களினூடாக அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டமை வரவேற்கத்தக்கதாகும். கிழக்கு மாகாணத்தில் உள்ள 45 பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களில் இந்த அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-ஏ.எல்.றியாஸ்...?

(பாலமுனை விசேட நிருபர்)