பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த இலங்கைத் தேயிலை, சுவையூட்டிகள்

துருக்கியின் இஸ்தான்பூலில் 2021 செப்டம்பர் 09 முதல் 12 வரை நடைபெற்ற 'உலக உணவு இஸ்தான்புல் வர்த்தகக் கண்காட்சியில்’ தூய இலங்கைத் தேயிலை, பாரம்பரியமான இலங்கை மரமுந்திரிகை மற்றும் சுவையூட்டிப் பொருட்கள் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.

தமது தயாரிப்புகளை துருக்கியின் முக்கிய நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து இலங்கைக் கண்காட்சி கூடத்தில் காட்சிப்படுத்துவதற்காக, இலங்கை நிறுவனங்களுக்கான வர்த்தக சந்திப்புக்களை மெய்நிகர் தளத்தின் மூலம் தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த ஆண்டு கண்காட்சியில் இலங்கை பங்கேற்பதை இலங்கைத் தேயிலைச் சபை மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை ஆகியவற்றுடன் இணைந்து தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் கீழ் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் டிட்ரையேங்கில் (பிரைவேட்) லிமிடெட், எக்ஸ்போ லங்கா (பிரைவேட்) லிமிடெட் மற்றும் ரன்ஸ்கிரிஸ்ப் கெஷுவ் ஆகிய மூன்று இலங்கை நிறுவனங்கள் பங்கேற்றன.

இஸ்தான்பூலிலுள்ள துருக்கிய வர்த்தக ஊடகவியலாளர்கள் சங்கத்தால் இலங்கைக் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில், துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் எம். ரிஸ்வி ஹசன் பங்குபற்றியிருந்தார். கண்காட்சி முழுவதும் பார்வையாளர்களுக்கு தேநீரை சுவைத்து அருந்தும் நிகழ்வையும் தூதரகம் ஏற்பாடு செய்தது.

உலக உணவு இஸ்தான்புல் வர்த்தகக் கண்காட்சி யூரேசியாவின் மிகப் பெரிய உணவுப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சியாகும். இதில் 40 நாடுகளில் இருந்து உற்பத்தியாளர்கள், கொள்வனவாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர். இது துருக்கிய வர்த்தக அமைச்சு, கொஸ்கெப், இஹ்பிர், துருக்கிய சமையல் வல்லுனர்கள் சங்கம், கேஸ்ட்ரோனமி சுற்றுலா சங்கம் மற்றும் உலக சுவையுணவாளர் சங்கத்தின் ஆதரவுடன் நடைபெற்றது.