பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தும் தேசிய கொள்கை தயாரிக்கும் திட்டம்

பாராளுமன்ற விசேட குழு கலந்துரையாடல்

இலங்கையில் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய கொள்கையொன்றைத் தயாரித்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை தயாரிப்பதன் அவசியம் தொடர்பில், இலங்கையில் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் மற்றும் பெண்களின் உரிமை மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஏனைய தரப்பினரின் பங்குபற்றலுடன் இலங்கையில் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் மற்றும் பெண்களின் உரிமை மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழு ஒன்லைன் முறையில் அண்மையில் கூடிய போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் நில்மினி ஹேரத், இது தொடர்பில் பல வருடங்களுக்கு முன்னர் தேசிய கொள்கை தயாரிக்கும் பணியை ஆரம்பித்ததாகத் தெரிவித்தார். எனினும் அதில் குறைபாடுகள் காணப்படுவதால் அமைச்சரவையின் அனுமதிக்கு முன்வைக்க முடியாமல் போனதாக மேலதிக செயலாளர் குறிப்பிட்டார். இதனால் அதில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து அந்தக் கொள்கையை முறையாக தயாரிப்பது தொடர்பில் நில்மினி ஹேரத் சுட்டிக் காட்டினார்.

விசேடமாக தொழிற்துறை, அரசியல் துறை போன்ற பல்வேறு துறைகளில் பெண்களின் பங்கேற்பு குறைந்த அளவில் காணப்படுவதாக இந்த விசேட குழுவின் தலைவரான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே இங்கு தெரிவித்தார். எனவே வரைவு மட்டத்தில் உள்ள இந்தக் கொள்கையை தேவையான வகையில் சரியான முறையில் தயாரித்து நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார். அதற்காக, உரிய தரப்பினருக்கு எழுத்துமூலம் அறிவித்து ஆதரவைப் பெற்று, அவர்கள் அனைவரினதும் கருத்துகளை உள்ளடக்கிய வகையில் இந்தத் தேசிய கொள்கையை விரைவாகத் தயாரிப்பது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

சம்பிரதாய கட்டமைப்பிலிருந்து விலகி புதிய கருத்துக்களின் கீழ் கவனம் செலுத்தி இந்தத் தேசிய கொள்கை மற்றும் செயல்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

வரைவு மட்டத்தில் உள்ள இந்தக் கொள்கை மற்றும் அதன் செயல்திட்டம் தொடர்பில் இந்தக் குழுவின் தலையீட்டில் செயற்பாட்டுக் குழுவொன்றை அமைத்து குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சின் திட்டமிடல் மற்றும் மேற்பார்வை பணிப்பாளர் ஜே.டி.எஸ். ஜயசிங்க மற்றும் இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் நில்மினி ஹேரத் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர்.

அது தொடர்பில் குழுவொன்றை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே இதன் போது குறிப்பிட்டார். அதனால் வரைவு மட்டத்தில் உள்ள இந்த தேசிய கொள்கையை சரியாக ஆராய்வதற்கு உரிய தரப்பினருக்கு அதனை வழங்குமாறு பாராளுமன்ற விசேட குழு இங்கு சுட்டிக் காட்டியது.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர மற்றும் மேலும் பல தரப்பினரின் ஒன்லைன் ஊடாக கலந்து கொண்டனர்.