பசுமை அமைதி விருதுக்கான சூழல் பொது அறிவுப் பரீட்சை

இயற்கையை நாம் மென்மேலும் சூறையாடினால்  கொரோனாப் பேரிடரை விடப் பெரும் பிரளயத்துக்குள் உலகம் தள்ளப்படும் என்று  ஐக்கியநாடுகள் சபை தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

எனினும், இந்த  எச்சரிக்கைகளைப் புறந்தள்ளி இயற்கைச் சூழலை நாம் அபிவிருத்தியின் பெயராலும்  உலகமயமாக்கலின் பெயராலும் தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறோம். இந்த  ஆக்கிரமிப்பை நிறுத்திச் சூழலுடன் ஒரு பசுமை அமைதி ஒப்பந்தத்தை உடனடியாகச்  செய்து கொண்டால் மாத்திரமே பேரழிவில் இருந்து எம்மையும் பாதுகாத்து  உலகத்தையும் காப்பாற்ற முடியும். இதனைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள்  மத்தியில் சூழல் விழிப்புணர்வு, சூழற் கல்வி மற்றும் சூழல் பாதுகாப்புச்  செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் பசுமை  அமைதி விருதுகளை வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளது.  
இத்திட்டத்தின் முதற்படியாக மாணவர்களிடையே சூழல் பொது அறிவுப்  போட்டிப் பரீட்சையினை நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. பரீட்சை  இணைய வழியூடாக 03.10.2021 (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை நேரம் இரவு 7.00  மணி தொடங்கி 8.00 மணிவரை நடைபெறவுள்ளது.

100 பல்தேர்வு வினாக்களைக் கொண்ட  இப் பரீட்சையில் தரம் 9 முதல் 13 வரை பயிலும் மாணவர்கள் தோற்ற முடியும்.  பரீட்சையில் சித்தி அடையும் அனைவருக்கும் பசுமை அமைதி விருதுச் சான்றிதழ்  வழங்கப்படும். சிறப்புச் சித்தி அடைபவர்களுக்குச் சான்றிதழோடு பெறுமதி  வாய்ந்த பரிசுப் பொதியும், முதல் மூன்று இடங்களுக்குத் தெரிவாகும்  மாணவர்களுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலத்தினாலான பசுமை அமைதி  விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்படும்.

சூழல் பொது அறிவுப் போட்டிப்  பரீட்சைக்கான வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில்  இடம்பெற்றிருக்கும்.

இப்பரீட்சையில் இலங்கையை வசிப்பிடமாகக் கொண்ட எவரும்  கலந்துகொள்வதற்குத் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். இலங்கைக்கு வெளியே  வாழ்பவர்களும் இப்பரீட்சைக்குத் தோற்ற அனுமதிக்கப்படுவார்கள்.
எனினும்,  இவர்கள் முதல் மூன்று பசுமை அமைதி விருதுகளுக்கும் உரித்துடையவர்களாகக்  கருதப்படமாட்டார்கள். இப் பரீட்சைக்குத் தோற்ற விரும்புபவர்கள்,  

www.tamilnationalgreen.org என்ற இணையதளத்தின் மூலம்  27.09.2021இற்கு முன்பாகப் பதிவுகளை மேற்கொள்ளுதல் வேண்டும். சிறப்புப்  பரிசுகளையும் விருதுகளையும் தீர்மானிப்பதற்கு புள்ளிகளின் அடிப்படையில்  தெரிவு செய்யப்படும் ஒரு தொகுதி மாணவர்கள் தேவையேற்படின் இரண்டாவது  சுற்றுப் பரீட்சைக்கும் தோற்ற நேரிடலாம்.

தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கான பரிசுகள் கார்த்திகை  மாதம் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தினால் நடாத்தப்படவுள்ள வடமாகாண  மரநடுகை மாத நிகழ்ச்சியின்போது வழங்கப்படும்.இதனை இதன் நிறுவுனர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.