ஓட்டமாவடி மஜ்மா நகர் உடலங்களால் நிரம்பல்

மாற்றிடங்களை ஆராய வேண்டுகோள்

கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி மஜ்மா நகர் பகுதியில் நில பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் நல்லடக்கப் பணிகளை தெரிவு செய்யப்பட்டுள்ள வேறு இடங்களுக்கு  மாற்றுமாறு கோரிக்கை விடுத்து கல்குடா தொகுதியிலுள்ள 69 அமைப்புகள் ஒன்றிணைந்த கூட்டமைப்பு நேற்று (24) ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ. தவராஜாவிடம் மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளன.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நிலப்பற்றாக்குறை காணப்படுகிறது. ஓட்டமாவடி மஜ்மா நகரில் குறித்த காணி மாத்திரமே அங்கு உள்ளது. அதில்தான் விவசாயம் செய்ய வேண்டும். குடியிருப்பாளர்களும் வசிக்க வேண்டும்.மேலும் அங்குதான் குப்பைகளும் கொட்டப்பட வேண்டும் என்பன விடயங்களை சுட்டிக்காட்டியும், கிண்ணியா வட்டமடு பகுதில் கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்ய 15 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதால் அங்கு அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்து பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

69 அமைப்புகள் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் தலைவர் எம்.ரி.எம்.நிஸாரின் தலைமையிலான மகஜர் கையளிக்கும் நிகழ்வில் சட்டத்தரணி ஹபீப் றிபான், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ஐ.ஹாமித் சிறாஜி, ஏ.ஜீ.அசீஸுர் ரஹீம், மஜ்மா நகர் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் ஏ.எல்.சமீம் உட்பட உலமாக்கள், பள்ளிவாசல்கள் நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.