அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு நியூயோர்க்கில் வரவேற்பு

அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு நியூயோர்க்கில் வரவேற்பு-Indian In US Welcome Narendra Modi in New York

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச்சபை அமர்வில் உரையாற்றுவதற்காக அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சென்றடைந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்கள், அவர் தங்கியுள்ள ஹோட்டலுக்கு அருகில் வெள்ளிக்கிழமை மாலையில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்கள் மத்தியில் அதிக பிரபல்யம் மிக்கவராக பிரதமர் மோடி விளங்குகிறார். நாட்டின் சனத்தொகையில் அவர்கள் சுமார் 1.2 சதவிகிதத்தினராவார். கடந்த வியாழனன்று வொஷிங்க்டன் டி.சியை வந்தடைந்த பிரதமர் மோடி, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய புலம்பெயர்ந்தோரிடமிருந்து உற்சாகமான வரவேற்பைப் பெற்றுக்கொண்டதோடு, வொஷிங்க்டன் டி.சி யில் உள்ள இந்திய சமூகமானது நாட்டின் 'வலிமை' என்றும் பாராட்டினார். அதேநேரம், 'வொஷிங்க்டன் டி.சி. யில் வசிக்கும் நன்றியுடைய இந்தியாவின் புலம் பெயர்ந்தவர்களுக்கு நல்வரவாகட்டும். எங்களது புலம்பெயர்ந்தோர் எங்களுக்கு பலம். இந்தியாவின் புலம்பெயர் மக்கள் உலகெங்கிலும் தம் பெருமையை வெளிப்படுத்தும் விதம் பெரும் பாராட்டுக்குரியது' என்றும் தம் 'ட்வீட்'டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் சந்திப்பு நடாத்தியதோடு கொவிட் 19 தொற்று தோற்றம் பின்னர் நடைபெற்ற முதலாவது குவாட் உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டார். மூன்று நாட்கள் பயணமாக வொஷிங்க்டன் சென்றடைந்துள்ள பிரதமர் மோடி, கொவிட் 19 பெருந்தொற்று தீவிரமடைந்த பின்னர் அண்டை நாடுகளுக்கு அப்பால் மேற்கொண்டிருக்கும் முதலாவது விஜயம் இது. இவ்விஜயத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதி கமலா ஹாரிஸுடன் சந்திப்புகளை நடாத்தி இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடியதோடு, அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிஷன், ஜப்பானிய பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோருடனும் சந்திப்புகளை நடாத்தியுள்ளார்.

அதேநேரம் செயற்றிறன் மிக்க முதலீடுகளை இந்தியாவுக்கு கொண்டு வரும் நோக்கில் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரிகள் ஐவருடனும் அவர் கலந்துரையாடினார்.

பிரதமர் மோடியின் அமெரிக்க விஜயம், உலகலாவிய சவால்களாக விளங்கும் கொவிட் -19 பெருந்தொற்று, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதன் அவசியம், காலநிலை மாற்றம் உள்ளிட்ட ஏனைய முக்கிய விடயங்களில் கவனத்தைக் குவித்துள்ள இம்முறை ஐ.நா. பொதுச்சபை அமர்வில் செப்டம்பர் 25 ஆம் திகதி உரையாற்றுவதோடு நிறைவடைகின்றது என்று ஏ.என்.ஐ. குறிப்பிட்டுள்ளது.