கொரோனா பேரிடர் காலத்தில் இணை மருத்துவமாக செயற்பட்ட பாரம்பரிய மருத்துவத்திற்கு அங்கீகாரம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகெங்கும் மருத்துவ பேரிடரால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இனி வரும் காலங்களில் எந்த மருத்துவ பேரிடர் வந்தாலும், அதிலிருந்து மக்களை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதற்காக முதல் தென்னிந்திய பாரம்பரிய மருத்துவ கருத்தரங்கம் சென்னையில் அக்டோபர் ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் மருத்துவ பேராசிரியர்கள், மருத்துவ மாணவர்கள், தங்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பிக்க உள்ளனர். இதன் மூலம் பாரம்பரிய மருத்துவத்திற்கு இந்திய அளவிலும், உலக அளவிலும் அங்கீகாரம் கிடைக்க உலக சுகாதார அமைப்பிற்கு அனுப்பி வைக்கவுள்ளது. இந்த கருத்தரங்கில் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க மக்கள் எந்த வழியை கையாள வேண்டும் எனவும், அதற்கான இயற்கை மருந்து வகைகளை அறிமுகப்படுத்தவும், அரங்கம் அமைத்து காட்சிப்படுத்தப்படவுள்ளது.

4 அமர்வுகளாக நடைபெற உள்ள இந்த நிகழ்வில் முதல் அமர்வாக தென்னிந்தியாவில் உள்ள மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சகத்தின் கருத்துக்களும், இரண்டாம் அமர்வாக பல்வேறு நாட்டு தூதர்கள் பங்குபெறும் நிகழ்வாகவும், மூன்றாவது அமர்வில் மருத்துவ பேராசிரியர்கள், பாரம்பரிய மருத்துவத்தில் புதிய தொழில்நுட்பம் மற்றும் சந்தைப்படுத்துதல் மருத்துவ மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற வழிகாட்டி நிகழ்வுகளும், துறை சார்ந்த வல்லுனர்களால் நடைபெற உள்ளது.

நேச்சுரோபதி, யுனானி, ஹோமியோபதி போன்ற எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் படித்த மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இந்த நிகழ்வு மத்திய சித்த ஆராய்ச்சி மையம், தேசிய சித்த மருத்துவ கல்லூரி, இந்திய பாரம்பரிய மருத்துவ இயக்குனரகத்தின் வழிகாட்டுதலோடு நிகழ்வு நடைபெறவுள்ளதாக உலகத் தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.