மக்களில் ஒரு சாரார் மத்தியில் இன்னுமே அலட்சிய மனோபாவம்!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நாடெங்கும் எதிர்வரும் முதலாம் திகதி வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனாலும் மக்கள் தங்களது வீடுகளுக்குள் முழுமையாக முடக்கப்படவில்லை. நீண்ட நாள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து மக்களை முழுமையாக அவர்களது வீடுகளுக்குள் முடக்கி வைப்பது சாத்தியமற்றது. அவர்களது அன்றாட வருமானத்துக்கான உழைப்பு மற்றும் மக்களுக்கான அத்தியாவசிய சேவைகள் பற்றியெல்லாம் கவனத்தில் கொண்டு, ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுமார் ஒரு மாத கால தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினாலும், மருத்துவ சுகாதாரப் பிரிவினரின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளாலும், மக்கள் ஓரளவாவது கடைப்பிடித்து வரும் அடிப்படை சுகாதாரப் பழக்கவழக்கங்களாலும் நாடெங்கும் பரவலாக கொவிட் தொற்று பரவுகின்ற வேகத்தில் ஓரளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. கொவிட் தடுப்பு செயலணியின் அன்றாட அறிக்கைகள் வாயிலாக இந்த நிம்மதி தருகின்ற தகவல்களை அறிந்து கொள்ள முடிகின்றது.

அதாவது நாளாந்தம் கொவிட் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை அவதானிக்க முடிகின்றது. தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்து கொண்டு செல்கின்றது. அதேசமயம் கொவிட் தொற்று காரணமாக அன்றாடம் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் இப்போது வெகுவாகக் குறைந்து விட்டது. இரு வாரத்துக்கு முன்னர் அன்றாடம் சுமார் இருநூறு பேர் கொவிட் தொற்று காரமாக உயிரிழந்திருந்தனர். தற்போது உயிரிழப்பு எண்ணிக்கையானது நூற்றுக்கு கீழே வீழ்ச்சியடைந்து விட்டது.

இவையெல்லாம் நிம்மதி தருகின்ற தகவல்கள் ஆகும். கொவிட் தொற்றின் மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்துவதில் எமது நாடு வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது என்பதுதான் இதன் அர்த்தமாகும். இரு வார காலத்துக்கு முன்னர் நிலவிய அச்ச நிலைமை இப்போது வெகுவாகத் தணிந்திருக்கின்றது. இதன் மூலம் உண்மையொன்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதாவது மக்கள் அனைவருமே சமூக இடைவெளியைப் பேணியவாறு, அடிப்படை சுகாதாரப் பழக்கவழக்கங்களையும் உரியபடி கடைப்பிடித்து வருவார்களானால் கொரோனா தொற்று பரவுவதை வெகுவாகவே கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம் என்பதே அந்த உண்மை.

மக்கள் மத்தியில் பாராட்டும்படியான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதென்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அனைவரிடமும் விழிப்புணர்வு இன்னுமே ஏற்படவில்லையென்பதுதான் இங்கே சுட்டிக் காட்ட வேண்டிய விடயமாகும். மக்களில் ஒருசாரார் கொவிட் தொற்றுக்கு அஞ்சியவர்களாக மிகுந்த அவதானத்துடன் அடிப்படை சுகாதார நடைமுறைகளைப் பேணியவாறு நடந்து கொள்வதை அவதானிக்க முடிகின்றது. இரட்டை முகக்கவசம் அணிந்தபடி, சமூக இடைவெளியைப் பேணியவாறு மிக அவதானமாகவே அவர்கள் நடமாடுகின்றனர்.

ஆனால் மற்றொரு சாராரோ அலட்சியப் போக்குடன் நடமாடித் திரிகின்றனர். இவர்கள் சமூக இடைவெளியை உரியவாறு பின்பற்றி நடந்து கொள்வதில்லை. முகக்கவசத்தை சரியாக அணிவதில்லை. மூக்கின் கீழேயே இவர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதைக் காண முடிகின்றது. மூக்கின் வழியாக சுவாசத்தின் மூலமே கொவிட் வைரஸ்கள் உடலுக்குள் செல்கின்றனவென்பதை இவர்கள் அறியாதவர்களாகவே பொது இடங்களில் நடமாடித் திரிகின்றனர். இவர்களே ஆபத்துக்குரியவர்களாவர்.

இவ்வாறான அலட்சியமும், அறியாமையும் உள்ளவர்களாலேயே கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சவால்ளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இவ்வாறானவர்கள் தங்களுக்கு மாத்திரமன்றி, ஏனையோருக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியவர்களாக உள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து நாடு மீள்வதாயின் மக்கள் ஒவ்வொருவருக்கும் சுயவிழிப்புணர்வும், சுயபாதுகாப்பு நடவடிக்கைகளும் அவசியம்.

முதலில் இந்தக் கொடிய வைரஸ் தொற்றில் இருந்து ஒவ்வொருவரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதன் மூலமே அவர்களைச் சூழவுள்ள மற்றவர்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். தங்களுக்கு கொவிட் தொற்று ஏற்படுமென்ற முன்னெச்சரிக்கை உணர்வு இல்லாதவர்கள் எவ்வாறு மற்றவர்களைப் பாதுகாக்கப் போகின்றார்கள் என்பதுதான் இங்குள்ள முக்கிய வினா ஆகும்.

கொவிட் அச்சுறுத்தல் தொடர்பாக ஊடகங்கள் மற்றும் ஏனைய வழிமுறைகளினூடாக போதியளவு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், குறிப்பிட்ட சில சாரார் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதென்பது இயலாத காரியமென்றே தெரிகின்றது. இவ்வாறானோரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதென்பது மருத்துவ சுகாதாரப் பகுதியினருக்கும் பொலிசார் மற்றும் படையினருக்கும் பெரும் சவாலாகவே உள்ளது.

இந்த விடயத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது. பாமர மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லையென்ற கருத்து சரியாக உள்ள போதிலும், கற்றறிந்தவர்கள் பலரும் கூட அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வது சிக்கலுக்குரிய விடயமாகும். விழிப்புணர்வென்பது அனைவர் மத்தியிலும் ஏற்படுவது அவசியம். அப்போதுதான் இந்த பெருந்தொற்றில் இருந்து எம்மால் முற்றாக மீள முடியும்.