ஆக்கஸ்: சர்ச்சைக்கு தீர்வுகாண அமெரிக்கா - பிரான்ஸ் முயற்சி

அவுஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகியவற்றுக்கு இடையிலான ஆக்கஸ் பாதுகாப்பு உடன்படிக்கை குறித்து எழுந்த சர்ச்சைக்குத் தீர்வுகாண, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா முயற்சித்து வருகின்றன.

முன்னதாக, நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டித்தரும்படி, அவுஸ்திரேலியா பிரான்ஸுடன் 66 பில்லியன் டொலர் மதிப்பிலான ஒப்பந்தம் செய்திருந்தது.

அதை இரத்து செய்த அவுஸ்திரேலியா பின்னர் அமெரிக்காவுடனும் பிரிட்டனுடனும் அணுவாற்றல் நீர்மூழ்க்கிக் கப்பல்களை வாங்க ஒப்பந்தம் செய்தது.

ஆக்கஸ் உடன்பாட்டைப் பற்றிய பொது அறிவிப்பு வெளிவருவதற்குச் சில மணி நேரத்திற்கு முன்னரே, அதைப் பற்றி தெரிந்துகொண்டதாக பாரிஸ் கூறியது. இந்த ஒப்பந்தம் முதுகில் குத்தும் செயல் என்று பிரான்ஸ் சாடியது.

இந்நிலையில் அரை மணி நேர தொலைபேசி உரையாடலுக்குப் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மாக்ரோனும் கூட்டு அறிக்கையை வெளியிட்டனர்.

இரு நட்பு நாடுகளுக்கும் இடையே வெளிப்படையான கலந்துரையாடல்கள் இருந்திருந்தால், இந்த விவகாரத்தைச் சிறந்த முறையில் கையாண்டிருக்கலாம் என்று அறிக்கை குறிப்பிட்டது.

இரு தலைவர்களும் அடுத்த மாதம் ஐரோப்பாவில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். பிரான்ஸின் தூதரை வொஷிங்டனுக்குத் திருப்பியனுப்பவும் மாக்ரோன் ஒப்புக்கொண்டுள்ளார். எனினும் திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்ட அவுஸ்திரேலியாவுக்கான பிரான்ஸ் தூதுவரை திரும்ப அனுப்புவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவின் செயற்பாடுகளின் முக்கியத்துவத்தை ஜோ பைடன் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.