பீஜிங்கில் யுனிவர்சல் உல்லாச உலகம் திறப்பு விழா கலாசார சீர்கேடாகக் கருதும் சீன கம்யூனிஸ்ட் கட்சி

பொழுதுபோக்கு, கலாசாரம், தனிமனிதனை போற்றுதல் மற்றும் மேற்கத்திய கலாசார மோகம் என்பனவற்றுக்கு மக்கள் இடம் கொடுக்கக் கூடாது என சீன வானொலியும் தொலைக்காட்சியும் தெரிவித்து வரும் சூழலில் கடந்த 20ம் திகதி பீஜிங்கில் அமெரிக்க யுனிவர்சல் ஸ்டூடியோவின் உல்லாச உலகம் வெகு விமரிசையாக திறந்து வைக்கப்பட்டது.

முதல் நாளுக்கான டிக்கட் விற்பனை கடந்த வாரம் இணைய தளத்தின் ஊடாக விற்பனைக்கு விடப்பட்டபோது 99 அமெரிக்க டொலர் பெறுமதியான டிக்கட்டுகள் அனைத்தும் 30 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்ததாகவும் உல்லாச உலகில் உள்ள இரண்டு உல்லாச ஹோட்டல் அறைகள் அனைத்தும் முன் பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும் சீன அரச வானொலி தெரிவித்துள்ளது.

மக்களின் மேற்கத்திய மோகம் நாட்டின் பொதுப்படையான சுபீட்சத்துக்கு ஊறு விளைவிக்கும் என்றும் இம் மோகம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி கருதும் நிலையிலேயே யுனிவர்சல் ஸ்டூடியோவின் உல்லாச உலக திறப்பு விழா நடந்துள்ளது.

இதே சமயம் நாட்டின் தொலைக்காட்சி மற்றும் இணைய தள நிறுவனங்களுக்கு தேசிய வானொலி, தொலைக்காட்சி நிர்வாகம் விடுத்துள்ள உத்தரவில் முறைப்படி நடந்து கொள்ளத் தவறும் நடிக நடிகைகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் நட்சத்திரங்கள் கடவுள் போல கருதப்படலாகாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பிரபல நட்சத்திரமான ஸாவோ வெய் சீன இணைய தளங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதோடு மற்றொரு நடிகை அவர் செலுத்தத் தவறிய 299 மில்லியன் யுவான் வரியை செலுத்துமாறு கேட்கப்பட்டுள்ளார்.