இலங்கை கிரிக்கெட் தேசிய, பதின்ம அணிகளின் ஆலோசகராக மஹேல ஜயவர்தன

இலங்கை கிரிக்கெட் தேசிய, பதின்ம அணிகளின் ஆலோசகராக மஹேல ஜயவர்தன-Mahela Jayawardena Appointed Consultant for Sri Lanka National and U19 Teams

இலங்கை கிரிக்கெட் தேசிய அணி மற்றும் 19 வயதிற்குட்பட்டோருக்கான அணிகளின் ஆலோசகராக, இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் அதன் முன்னாள் தலைவர்களில் ஒருவருமான மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.

ICC ரி20 உலகக் கிண்ணத்தின் முதற் சுற்றுப் போட்டிகளுக்கான ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

IPL கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்டு வரும் மஹேல ஜயவர்தன, அத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஐக்கிய இராச்சியத்தில் கொவிட்-19 உயிர்க் குமிழியை பேணியவாறு, உடனடியாக இலங்கை அணியுடன் இணையவுள்ளார்.

ICC ரி20 உலகக் கிண்ண குழு நிலை போட்டிகளுக்கு தெரிவு செய்யப்படும் பொருட்டு, எதிர்வரும் ஒக்டோபர் 16 - 23 இல் இடம்பெறவுள்ள, நமீபியா, அயர்லாந்து, நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டிகளில், தனது அனுபவத்தின் அடிப்படையிலான மூலோபாய ஆதரவை இலங்கை அணி வீரர்களுக்கு வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும், அவ்வாறு நியமிக்கப்படும் பட்சத்தில் அது நிச்சயமாக மஹேலவாக மட்டுமே இருக்க முடியும் என இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா, அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசனை குழுவிக் பரிந்துரைக்கமைய, மஹேல ஜயவர்தன ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.