கணவரின் கழுத்தை காதலர் காலால் அழுத்திப் பிடிக்க நான் திருகுவளை கட்டையால் தலையில் அடித்துக் கொன்றேன்

- சந்தேக நபரான மனைவி வாக்குமூலம்
- அரியாலை -பூம்புகார் கொலை சம்பவம்

கணவரின் கழுத்தை காதலர் காலால் அழுத்திப் பிடிக்க நான்  திருகுவளை கட்டையால் தலையில் அடித்துக் கொன்றேன் என்று அரியாலை -  பூம்புகாரில் இடம்பெற்ற கொலையின் முதல் சந்தேகநபரான கொலையானவரின் மனைவி  ஒப்புதல் வாக்குமூலம் வழங்கினார் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

அத்துடன், அவரின் காதலர் என்று கூறப்படும் நபர் மீது  40இற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை  கொள்ளை, திருட்டு மற்றும் பாலியல் வன்புணர்வு குற்றங்களுடன் தொடர்புடையவை  என்றும் பொலிஸார் கூறினர். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை அரியாலை திருகுவளையால் தலையில்  தாக்கப்பட்டு குடும்பத் தலைவர் ஒருவர் உயிரிழந்தார். அச்சுவேலி தெற்கை  சேர்ந்த பூம்புகாரில் வசித்து வருபவருமான துரைராசா செல்வகுமார் (வயது 32)  என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார். 

இந்தக் கொலையுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும்  கொலையானவரின் மனைவியும், அவரின் காதலரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு நேற்று முன்தினம் இருவரும் யாழ்.  நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதவான்  இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். 

கரவெட்டி தினகரன் நிருபர்