தலிபான்களை நம்புவதற்கு ஆப்கான் மக்கள் தயாரில்லை!

தலிபான்களை நம்புவதற்கு ஆப்கான் மக்கள் தயாரில்லை!-Afghan People Not Ready to Believe Taliban

- அச்சத்தைப் போக்கும் வல்லமை பாகிஸ்தானின் கரங்களில்!

பல்லாயிரக்கணக்கான ஆண்களையும், பெண்களையும் சிறியவர்களையும் வெற்றி பெற்ற படையினர் சிறைப்பிடித்து அடிமைகளாகவும் வேலையாட்களாகவும், அழகிய பெண்கள் போகப் பொருட்களாகவும் தமது நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விடுவார்கள்.

அது தனிமனித சுதந்திரம், மனித உரிமைகள் என்றால் என்ன என்று அறியாத காலம் அது. அகதி என்ற சொல் அறியப்படாத காலம். அரசர்கள் தம்மை முன்னிலைப்படுத்தித்தான் நாடுகளை ஆண்டார்களே தவிர மக்களை முன்நிறுத்தி அல்ல.

ஐரோப்பாவில் பிரெஞ்சு புரட்சி ஒரு சகாப்தமாக வர்ணிக்கப்படுகிறது என்றால் அது தனிமனித உரிமைகள் பற்றிப் பேசி ஆள்பவர்களை கேள்வி கேட்டதுதான். உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய சமுதாய புரட்சியாளராக என்றென்றும் திகழ்பவர் கார்ல் மார்க்ஸ் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். அரசனும், பிரபுக்களும், சாமானியனும் சமம் என்றால் அது எவ்வளவு பெரிய சமுதாயப் புரட்சி!

தலிபான்களை நம்புவதற்கு ஆப்கான் மக்கள் தயாரில்லை!-Afghan People Not Ready to Believe Taliban

அரசர்களின் உலகளாவிய அதிகாரமும் ஆணவமும் கொண்ட கட்டமைப்பு முதலாம் உலகப் போரின் பின்னர் உடைப்பெடுத்திருந்தாலும், உண்மையான மாற்றம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரேயே நிகழ்ந்தது. ஆனால் இதே இரண்டாம் உலகப் போரின் பின்னர் இன்னொரு பிரச்சினையும் எழுந்திருக்கிறது. அது மூர்க்கமான தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம்!

பெரும்பாலான அதி தீவிரவாத அமைப்புகளின் தாய்மண்ணாக விளங்குவது மத்திய கிழக்கு. இஸ்ரேலை அழித்து பாலஸ்தீனத்தை மீட்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து, உலகின் வேறு நாடுகளில் வெவ்வேறு அமைப்புகளும் அதையே பின்பற்ற ஆரம்பித்ததில் உலக நோயாக அது விரிவடைந்திருக்கிறது. ஆனால் எத்தனை நாடுகளை நேரடித் தீவிரவாதத்தின் ஊடாக அவை கைப்பற்றியுள்ளன என்றால் இல்லை என்பதே பதில். பயங்கரவாதம் என்பது ஒரு நாட்டுக்கு குடைச்சல் கொடுத்து அதை நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கும் ஒரு வழிமுறை என்பதாகவே பார்க்க முடிகிறது.

ஆனால் முதல் தடவையாக ஒரு நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்ய வந்திருக்கிறது தலிபான் அமைப்பு. ஒரு ஈவு இரக்கமற்ற பயங்கரவாத அமைப்பு ஆப்கானிஸ்தானை எவ்வாறு ஆளப் போகிறது என்பதை இனிமேல்தான் பார்க்க ​வேண்டும்.

ஆப்கானிஸ்தான் ஒரு பாவப்பட்ட நாடு. மலைகளின் அரசனாக அமைந்திருக்கும் இந்த வறிய நாடுதான் எவ்வளவு இம்சைகளை அனுபவித்து விட்டது! ஏற்கனவே, இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஒற்றைக் கண் முல்லா உமரின் தலைமையில் முஜாஹிதீன்களால் ஆளப்பட்ட நாடு அது. அச்சமயத்தில் கடுமையான அடக்குமுறைகளுக்கும், பெண் உரிமைகள் நசுக்கப்படுதலுக்கும் ஆளானது அந்நாடு. அவர் அல்கைதாவுக்கு அடைக்கலம் தந்ததால் அமெரிக்காவின் சீற்றத்துக்கு ஆளாகி முஜாஹிதீன்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.

தலிபான்கள் தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பதால் அங்கு மக்கள் மத்தியில் அச்சமும் குழப்பமும் ஏற்பட்டிருப்பதை கடந்த ஓகஸ்ட் முதல் கண்டோம். ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் தம்மை காப்பாற்றும்படி கேட்டு காபூல் விமான நிலையத்தில் கூடியதைப் பார்த்தோம். அதேபோல பாகிஸ்தான் எல்லை வழியாக பாகிஸ்தானுக்குள் நுழையவும் முயல்கின்றனர். எந்த நாட்டு மக்களைக் 'காப்பாற்ற' தலிபான்கள் வந்தார்களோ அந்த நாட்டு மக்களே தலிபான்களைக் கண்டு தலைதெறிக்க ஓடுகிறார்கள் என்றால் அதற்கான காரணம் என்ன?

அவர்களின் ஆட்சியில் பெண் சுதந்திரம் நசுக்கப்படும் என்பதும், தனிமனித சுதந்திரம் மறுக்கப்படும் என்பதுதான் காரணம் என்பது வெளிப்படையானது.

பிரிட்டனைத் தளமாகக் கொண்ட 'கிரைசிஸ் ரெஸ்பொன்ஸ் ஜேர்னல்' என்ற சஞ்சிகை, ஆப்கானின் அகதிகள் பிரச்சினை நீண்ட வரலாற்றைக் கொண்டது என்கிறது. இந்த ஆண்டில் மாத்திரம் நான்கு இலட்சம் ஆப்கான் மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர் என்கிறது மனித உரிமைகள் பேரவை.

தலிபான்களின் வருகையையடுத்து 2.9 மில்லியன் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். மொத்தமாக எடுத்துக் கொண்டால் 50 இலட்சம் பேரளவில் வரும் என்கிறது இச்சஞ்சிகை. இச்சஞ்சிகையின் பாகிஸ்தான் நிருபராக பணியாற்றும் லுவட் சாயிட், "அனைவரும் எங்காவது ஓடிக் கொண்டிருக்கிறார்கள்" என்கிறார்.

இராணுவத்தைச் சேர்ந்தவர்களும், அதனுடன் தொடர்பு கொண்டவர்களும், முன்னைய அரசில் பணியாற்றியவர்களும், சுதந்திர சிந்தனையாளர்களும், சமூகப் பணியாளர்களும், தப்பியோடுவதில் முனைப்புடன் இருக்கிறார்கள். காரணம், சித்திரவதை மற்றும் உயிர்ப் பயம்!

இதனால் குழப்பமடைந்த சாதாரண மக்களும் தப்பியோட நினைக்கிறார்கள். தலிபான்களைக் கண்டு அச்சமடைவதை விட அவர்களால் ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலையே மக்களை தப்பியோட வைக்கிறது. முன்பிருந்த ஆட்சியுடன் ஏதேனும் தொடர்பு இருக்குமாயின் அந்த ஆதாரங்களை தீயிட்டு பொசுக்கி தலைகவிழ்ந்திருக்க முயற்சிக்கிறார்கள். குற்றவாளிகள், அட்டூழியம் செய்பவர்கள், திருடர்கள், பெண்களை பலாத்காரம் செய்பவர்களோடு வாழ்வது எப்படி? என்பதே இங்கே பிரதான கேள்வியாக உள்ளது என்கிறார் லூவட் ஸாயிட்.

லண்டனைச் சேர்ந்த சமூகவியலாளர் லிசா ஷுஸ்டர், "தலிபான்கள் எவ்வளவுதான் தாம் மன்னிப்பு வழங்குவதாகவும் பெண் உரிமை வழங்கப்படும் என்றும், தண்டனைகள் வழங்க மாட்டோம் என்றும் சொன்னாலும் மக்கள் நம்பத் தயாரில்லை. நடைமுறையில் வீடு வீடாகச் சென்று தேடுதல் நடத்துகிறார்கள். ஹஸாரஸ் வகுப்பினர் வசிக்கும் பகுதிகளில் இது அதிகம் நடக்கிறது. உத்தியோகபூர்வ வாகனங்கள், ஆவணங்கள் கிடைக்குமா எனத் தேடுகிறார்கள்" என்று விரிவாகப் பேசுகிறார்.

இத்தகைய நடவடிக்கைகளால் குழப்படைந்திருக்கும் மக்கள், எனக்கும் என் குடும்பத்துக்கும் என்ன நடக்கும்? என்று கருதுவதால்தான் தப்பிச் செல்ல நினைக்கிறார்கள்.

இன்றைய ஆப்கானியர்களை சாந்தமடையச் செய்யும் வல்லமை பாகிஸ்தானுக்கே உண்டு. ஏனெனில் தலிபான்களை போஷிக்கும் நாடு அது. இன்றைக்கு நெருங்கிய நட்பு நாடாகவும் விளங்குகிறது. அந்நாட்டில் ஏற்கனவே மூன்று இலட்சம் ஆப்கான் அகதிகள் உள்ளனர். பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நீண்ட எல்லை காணப்படுகிறது. 'ஸ்பின் பொல்டாக்' என்பது ஒரு எல்லை வாசல். பாகிஸ்தான் அதை மூடி வைத்துள்ளது. அகதிகள் வராதபடிக்கு.

அகதிகள் என்ற போர்வையில் போதை கடத்தல்காரர்கள், ஆயுததாரிகள், மத சித்தாந்தவாதிகள் உள்ளே வந்து விடுவார்களோ என்பது பாக். அதிகாரிகளின் அச்சம்.

பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஷேக் ராஷிட், குவெட்டா நகரில் கடந்த ஐந்தாம் திகதி ஆற்றிய உரையில், பாகிஸ்தானில் அகதி முகாம் இல்லை என்றும் புதிதாக அமைப்பதற்கான சாத்தியமும் கிடையாது என்றும் கூறியிருந்தமை அந்நாட்டின் ஆப்கான் அகதிகள் தொடர்பான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக உள்ளது. இது நடந்து மூன்று நாட்களின் பின்னர் 'டோன்' என்ற பாக். செய்திப் பத்திரிகை தஞ்சம் கோரி வந்த 200 ஆப்கான் அகதிகளை பாக். எல்லைக் காவலர்கள் திருப்பி அனுப்பி விட்டனர் என்ற தகவலை வெளியிட்டிருந்தது.

பாகிஸ்தான் தலிபான்களுக்கு ஆதரவாகவும் அகதிகளுக்கு இன்னொரு முகத்துடனும் நடந்து கொள்கிறது. எனினும் ஆப்கான் தலிபான்களை கையாளும் 'ஸ்விட்ச்' பாகிஸ்தான் வசமே உள்ளதால் ஆப்கான் மக்களின் அச்சங்களை போக்கும் வல்லமையும் பாக். அரசிடம் இருக்கிறது.

அரசுகள் இருக்கும் வரை அகதிகள் பிரச்சினை தீரப் போவதில்லை என்பதே உண்மை. அரசர் காலத்தில் அகதிப் பிரச்சினை இருந்ததில்லை. அதாவது, ஆக்கிரமித்து உள்ளே வரும் அயல்நாட்டுப் படை போரில் வெற்றி பெற்றதும் நாட்டை சூறையாடும், அட்டூழியங்கள் செய்யும்.