ஆன்மிகம் நாடி வந்த மக்களுக்கு குருவாகவிருந்து வழிகாட்டியவர் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள்

இலங்கைத் தீவில் பல்வேறுகாலகட்டங்களில் பல்வேறு மகான்களும், ஞானிகளும் தோன்றி ஆன்மீகப் பணியாற்றியுள்ளனர். அவர்களில் மலையகத்தில் தோன்றிய காயத்ரி சித்தர் முருகேசு சுவாமி அவர்களும் ஒருவராவார். அவர் மறைந்து 14 ஆம் ஆண்டு மகாசமாதி தினம் (24-09-2021) இன்றாகும். இன்றைய தினத்தில் அவரது பக்தர்கள் மிகவும்பக்திபூர்வமாக அவரை நினைவுகூருகின்றனர்.

கண்டி பல்லேகலயில் இராமன் காளிமுத்து_ சந்தனாம்பாள் தம்பதிகளின் மூத்த புதல்வனாக 26-10-1933 இல் முருகேசு சுவாமிகள் பிறந்தார். தனது 5 வது வயதில் தந்தையின் தொழில் நிமித்தம் நுவரெலியாவிற்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்து நுவரெலியா புனித திருத்துவக் கல்லூரியில் தனது பாடசாலைப் படிப்பைத் தொடங்கினார். தனது இளமைப் பருவத்தில் குடும்பச் சுமை காரணமாக பல தொழில்களில் ஈடுபட நேரிட்டாலும், அவரது மனமோ ஆன்மீக தேடல்களிலே ஆர்வம் காட்டியது. இதன் காரணமாக 1950 இற்குப் பின்னர் அடிக்கடி இந்தியாவிற்கு ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்ளத் தொடங்கினார்.

எண்ணற்ற ஆன்மீக பணிகள் செய்து கொண்டிருந்த பகவான் கண்ணைய்யா யோகியின் சீடன் ஆனார். முருகேசு சுவாமிகள் அன்னை காயத்ரி மேல் அளவில்லா பக்தி கொண்டிருந்தார். இதனை அறிந்த பகவான் கண்ணைய்யா யோகிகள் 'இன்றிலிருந்து உன்னை காயத்திரி சித்தர் என்று எல்லோரும் அழைக்கட்டும்' என்று கூறி குருதீட்சை அளித்து ஆசிர்வதித்தார். அதன் பின்னர் இந்தியாவில் தென்குமரி தொடக்கம் வடஇமயம் வரை ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட முருகேசு சுவாமிகள் பல்வேறு ஆச்சிரமங்களில் மகான்களையும் ரிஷிகளையும் ஞானிகளையும் சந்தித்து அவர்களின் அருளாசி பெற்றார்.

1960 களின் பிற்பகுதியில் இலங்கை திரும்பிய சுவாமிகள், கொழும்பு மட்டக்குளியில் தனது குருவின் கட்டளைக்கிணங்க 'ஆத்ம யோக ஞான சபா' இலங்கைக் கிளையை ஆரம்பித்து பிற்காலத்தில் உலகளாவிய ரீதியில் காயத்ரி அன்னையின் உபாசணையையும், மகிமையையும் உலகறியச் செய்தார்.

1975 இல் ஒரு சில பக்தர்களின் துணையுடன் நுவரெலியாவில் இலங்காதீஸ்வர ஆலய வளாகத்தில் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீ சிவபாலயோகி அவர்கள் நர்மதா நதியில் கண்டெடுத்த உயிர்பாசான இலிங்கத்தை இலங்கைக்குக் கொண்டு வந்து அதனைத் தனது திருக்கரங்களாலேயே சுவாமிகளுடன் இணைந்து பிரதிஷ்டை செய்தார். மலையகத்தின் மாபெரும் சிவாலயத்தையும் சித்தபீட ஆச்சிரம வளாகத்தையும் பின்னர் உலகின் முதலாவது காயத்ரி பீட ஆலய வளாகத்தையும் அமைத்தார். குரு சிஷ்ய பாரம்பரியம், சித்த வழிபாட்டு முறை, யாக, யோக, தியான, மந்திர கூட்டுப் பிரார்த்தனை முறை என்பனவற்றை இந்நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தி மலையக மக்களின் வாழ்வில் ஆன்மீக எழுச்சியை ஏற்படுத்தத் துணை நின்றார்.

1990 களின் பின்னர் சுவாமிகளின் ஆன்மீகப் பணிகள் விரிவடைந்தன. 1994 இல் இந்திய தலைநகர் டெல்லியில் 171 நாடுகளைச் சேர்ந்த யோகிகள், ஞானிகள் மற்றும் மகான்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய உலக ஆன்மீக பாராளுமன்றத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமை சுவாமிகளின் தவப்பணியையும், தவவலிமைகளையும் எடுத்துணர்த்தின. 1996 இல் குருமுனிவர் அகஸ்தியரின் குருப்பரம்பரை வாரிசான தென்னாபிரிக்காவைச் சேர்ந்த சுவாமி ஸ்ரீ சங்கரானந்த மகராஜ் அவர்கள் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து ஏப்ரல் 1977 இல் தென்னாபிரிக்கா சென்ற சுவாமிகள், அங்கே தென்னாபிரிக்க காயத்ரி பீட ஆச்சிரம வளாகத்தை நிறுவி சுவாமி சங்கரானந்தாவிடம் கையளித்தார். தற்போது தென்னாபிரிக்காவில் வெருளம் மற்றும் ஜொஹனாஸ் பேர்க் ஆகிய இரு நகரங்களிலும், கொழும்பு கொட்டாஞ்சேனையிலும் அன்னை காயத்ரி மகா காளியம்மன் சித்த பீட ஆலய வளாகம் சுவாமி ஸ்ரீ சங்கரானந்த மகராஜ் அவர்களின் நேரடி வழிகாட்டலில் மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றது.

1997 இல் கிழக்கு மாகாண மக்களின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க அங்கு விஜயம் செய்த சுவாமிகள் அம்பாறை மாவட்டத்தில் தம்பிலுவில் காயத்ரி தபோவன ஆலய வளாகத்தை உருவாக்கினார். 2004 இல் மட்டக்களப்பு கல்லடி சப்தரிஷி ஆலய வளாகமும், திருகோணமலை கிண்ணியா வெந்நீர் ஊற்றுக்கருகில் ஆத்ம யோக ஞான சபா ஆசிரம வளாகமும் அமைக்கப்பட்டன.

2000 இற்குப் பின்னர் சுவாமிகளின் உடல் நலம் நலிவுறத் தொடங்கிய போதிலும் தன்னை நாடி வரும் பக்தர்களிடம் என்றும் போல மிக எளிமையாக இனம், மதம், பேதம் பார்க்காமல் அன்போடு அழைத்து, முதலில் அன்னமிட்டு பசி தீர்த்த பின்னரே அவர்களின் குறைகள், மனச்சுமைகளை தமது தவ வலிமைகளால் நிவர்த்தி செய்வார். ஆன்மீக தேடலுடன் தன்னை நாடுவோருக்கு குருவாகவும், வழிகாட்டியாகவும் இருந்து வந்துள்ளார். இவற்றுக்காக பல ஆன்மீக படைப்புகளை தமது குருவின் ஆசியுடன் எமக்குத் தந்து அருளியுள்ளார்.

அவற்றில் காயத்ரி குப்த விஞ்ஞானம், மானசயோகம் பாகம் 1,2,3 மற்றும் மனித காந்த விஞ்ஞானம், காயத்ரி உபாசன பந்ததி என்பன குறிப்பிடத்தக்கவை. அதே போல் சுவாமிகளிடம் காண்பதற்கும் கிடைப்பதற்கும் அரிய ஏராளமான ஆன்மீக பொக்கிஷங்கள், ஏட்டுச் சுவடிகள் என்பன இருந்தன. அவற்றை பல ரிஷிகள், ஞானிகளிடம் பெற்று மிகப் பாதுகாப்பாக வைத்திருந்தார். அவை இன்றும் நுவரெலியா ஆசிரம வளாகத்தில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

2007 இல் சுவாமிகளின் உடல் நிலை மோசமடைய அவர் இந்தியாவிற்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். 24-09-2007 இல் இலங்கை மக்களுக்கு, குறிப்பாக மலையக மக்களுக்காக ஆன்மீக பணியாற்றிய மகாகுரு மகாசமாதி நிலையை அடைந்தார்.

ம.மகேஷ்
(காயத்ரி பீடம், கொழும்பு)