பிறர் மனதை புண்படுத்தாதீர்

பிறர் மனதை புண்படுத்தாதீர்-Do Not Hurt Anyone-Islam

மனிதனுக்கு அல்லாஹ்வினால் ஏராளமான நிஃமத்துக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் அனைத்தையும் விட மனிதனின் உடலுறுப்புகள் முதன்மையானது.

அதில் கற்பனை செய்யப்படுகின்ற மற்றும் சிந்திக்கின்ற விடயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுகின்ற மிகமிக முக்கிய உறுப்பாக மனிதனின் நாவு விளங்குகிறது. ஒரு மனிதன் உலகில் மக்களுக்கு மத்தியில் நல்லொழுக்கம் உள்ளவனாகவும் நல்லவனாகவும் தோன்றுவதற்கு இந்த நாவு தான் காரணமாக அமைகின்றது. அதேபோன்று ஒரு மனிதனை மிக மோசமானவனாகவும் ஒழுக்கத்தில் வீழ்ச்சியடைந்தவனாவும் மாற்றுவதற்கும் இந்த நாவு துணை புரிகின்றது. அந்த வகையில் நாவினால் செய்யக்கூடிய பாவங்கள் ஏராளமானவையாகும்.

அவற்றில், மற்றவர்களது குறைகளைப் பேசுவது சமூகத்திற்கு மத்தியில் மலிந்து காணப்படுகின்றன. அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் ஒரு தடவை 'புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என வினவிய போது, அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர்" என நபித்தோழர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் 'என்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவதுதான் புறம்' என்றார்கள். 'நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா'? என்று கேட்கப்பட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப்பற்றி இட்டுக் கட்டுகிறாய்' என்றார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம்)

புறம் பேசுவது பெரும் பாவங்களில் ஒன்றாகும். ஒரு மனிதன் வெறுக்கக்கூடிய எதனைப் பற்றிக் குறிப்பிட்டாலும் அது புறம் பேசுவதே ஆகும். ஒருவனைப் பற்றி அவன் இல்லாமல் இருக்கும் போது அவனைப் பற்றி கூறுவதும் இதில் அடங்கும். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் 'நீ கூறுவது அவனில் இருந்தால் அது புறம் பேசுவதாகும். 'புறம் பேசுவது இவ்வுலகில் தீய காரியங்களுக்கு எவ்வாறு காரணமாக அமைகின்றதோ அதேபோன்று நாம் பல நன்மைகள் செய்திருந்தாலும் மறுமையில் ஒரு நன்மை கூட பயனளிக்காத நஷ்டவாளிகளாக்கி விடவும் முடியும். மறுமையின் நஷ்டவாளிகள் யார் என்பதை நபி (ஸல்) அவர்கள் மிகதெளிவாகக் கூறியுள்ளார்கள்.

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள், ஸஹாபாக்களிடத்தில் 'உங்களில் நஷ்டவாளி யார் என்று உங்களுக்கு தெரியுமா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் 'எங்களில் எவர்களிடத்தில் தீனாரும் உலகத்தில் வாழ்வதற்கு வசதி வாய்ப்பும் இல்லையோ அவர்களே நஷ்டவாளிகள்' எனக் குறிப்பிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'மறுமை நாளில் ஒரு மனிதன் தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற கடமைகளை நிறைவேற்றிய நன்மைகளுடன் வருவான். ஆனால் பலர் வந்து இவன் என்னை ஏசினான். நான் செய்யாத விசயத்தை என் மீது சுமத்தினான்.

என் செல்வத்தை சாப்பிட்டான், இரத்தங்களை ஓட்டினான் என்றெல்லாம் ஒவ்வொருவரும் அவனுக்கு எதிராக முறையீடு செய்வார்கள்.

அப்போது அவன் இவ்வுலகில் செய்த நல்லமல்கள் அவர்களுக்கு எடுத்தெடுத்து கொடுக்கப்படும். நல்லமல்கள் முடிந்த பிறகு அவர்களின் தீமைகளில் இருந்து எடுக்கப்பட்டு அம்மனிதனுக்கு வழங்கப்படும். இவற்றின் விளைவாக இவன் நரகத்திற்குள் நுழைவிக்கப்படுவான் என்று கூறினார்கள்.
(ஆதாரம்: இப்னு ஹிப்பான்)

இந்த நபிமொழி மறுமையில் புறம் பேசியவனுக்கு ஏற்படும் விளைவைத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.

அல்லாஹ் கூறுகின்றான், 'முஃமின்களே! சந்தேகமான பல எண்ணங்களில் இருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும். பிறர் குறைகளை நீங்கள் துருவித்துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்.

அன்றியும் உங்களில் சிலர் சிலரைப் பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவராவது உம்முடைய இறந்த சகோதரின் மாமிசத்தை புசிக்க விரும்புவீர்களா? இல்லை நீங்கள் இதனை வெறுப்பீர்கள்.

இன்னும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன். மிக்க கிருபை செய்பவன். (அல்குர்ஆன் 49:12)

நமக்குத் தெரியாத விஷயங்களை விட்டும் அத்தகைய செய்திகளை வதந்திகளாகப் பரப்புவதை விட்டும் நாம் முற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும். இவர் சொன்னார் அவர் சொன்னார் என்ற வார்த்தைகளை முற்றாகவே தவிர்க்க வேண்டும். சில வேளைகளில் இவ்வாறான வார்த்தைகள் அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் பொய் உரைப்பதற்குக் கூட இட்டுச் சென்று விடும். அதனால் ஒவ்வொரு விஷயத்திலும் ஏதாவது தவறு இருக்கின்றதா? அல்லது பிறரை துன்புறுத்தும் வகையில் நமது பேச்சுக்கள் அமைந்திருக்கின்றதா? என்பதை நாம் முன்னவதானத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நாம் பேசக் கூடிய அனைத்து விஷயங்களுமே பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்பதை அல் குர்ஆன் குறிப்பிட்டிருக்கின்றது.

இதனை நாம் ஒரு கணமும் மறந்து விடக்கூடாது. நாம் பேசுகின்ற விஷயம் நல்லதாக இருந்தாலும் தீயதாக இருந்தாலும் பதியப்படுகின்றது என்பதை அல் குர்ஆன் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.

அதனால் நியாயத் தீர்ப்பு நாளில் இவைகள் பரிசீலிக்கப்பட்டு அதற்குத் தக்கவாறு தகுந்த கூலி கொடுக்கப்படும். இதனால் நாம் மிகுந்த கவனமுடன் நடந்து கொண்டு நமது நாவைக் கட்டுப்படுத்தி மறுமையில் நஷ்டவாளியாவதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

நாம் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் பிரயோசனமுள்ளதாக அமைத்துக் கொள்ள வேண்டும். பேசுவதாக இருந்தால் நல்லதேயே பேசட்டும் இல்லாவின் வாய்மூடி மௌனமாக இருக்கட்டும் என்பது நபி மொழியாகும். பிறரை புறம் பேசி அவர்களது மனதை புண்படுத்தும் வார்த்தையாக இல்லாமல் எமது பேச்சுக்கள் இருக்க வேண்டும். முடிந்தவரைக்கும் நல்லவைகளையே பேசி அல்லாஹ்வின் அருளையும் அன்பையும் பெற்றுக்கொள்ள முயற்சி செய்வோம்.

மௌலவி எம்.யூ.எம். வாலிஹ்