கொரோனாவை காட்டி கல்முனை மாநகரசபை அமர்வு இழுத்தடிப்பு

உறுப்பினர்கள் போர்க்கொடி

கொரோனாவைக் காரணம்காட்டி கடந்த இரண்டு மாதங்களாக, கல்முனை மாநகர சபை அமர்வுகள் நடாத்தப்படாமல் தொடர்ச்சியாக இழுத்தடிக்கப்பட்டு வருவதாக  அங்குள்ள மாநகர சபை உறுப்பினர்கள் கடும் விசனத்தை தெரிவித்து வருகின்றார்கள்.

இதுவரை  கொரோனாவை காரணம் காட்டி 5 தடவைகள் 5 மாதங்கள் மாதாந்த அமர்வுகள் ரத்துச் செய்யப்பட்டிருக்கின்றன. கடந்தாண்டில் டிசம்பர் மாதத்திலும், இவ்வாண்டில் மே, யூன், ஆகஸ்ட், செப்டெம்பர் ஆகிய மாதங்களில் கூட்டம் நடைபெறவில்லை.

செப்டெம்பர் மாதத்திற்கான அமர்வு இறுதியாக புதன்கிழமை (22) இடம்பெறவிருந்தது. உறுப்பினர்கள் வருகை தந்திருந்தும், இறுதிநேரத்தில் கூட்டம் நடைபெறாது என செயலாளர் அறிவித்தார். அதனால் இந்த மாதத்திற்கான கூட்டமும் நடைபெறவில்லை.

இறுதியாக, கடந்த ஜூலை மாதம் மாதாந்த கூட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ச்சியாக கூட்டங்கள் நடைபெறாதபோதிலும், மேயர் மற்றும் உறுப்பினர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டிருக்கிறது என்பது இங்கு சுட்டிக்காட்டத்ததக்கது. கூட்டங்களுக்கு வந்ததாக ஒப்பமிட்டதால் கொடுப்பனவு வழங்கப்பட்டதாக  தெரிவிக்கப்படுகிறது.
தமிழத் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை நகரத்திற்கான உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் கூறுகையில்:
கடந்த பல மாதங்களாக கூட்டத்திற்கான கடிதங்கள் வருகின்றன. சபைக்கு வந்தால் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக செயலாளர் அறிவிக்கின்றார். நாங்கள்  பலத்த வேலைப் பழுக்களுக்கு மத்தியில் கூட்டத்திற்காக வந்தால் இப்படி நடப்பது ஏமாற்றமே.

நாட்டில் ஏனைய உள்ளுராட்சி சபைகள் கூட்டங்களை நடாத்தும்போது கல்முனை மாநகர சபைக்கு மட்டும் ஏனிந்த கொரோனாச் சாட்டு?

சபையில் வருமானம் இல்லையென்றால் சபையைக் கூட்டி வருமானம் வரும் மார்க்கங்களை உறுப்பினர்களிடமிருந்து கேட்டறிய வேண்டும்.

உடனடியாக கூட்டம் நடாத்தப்பட வேண்டும். மக்களது பிரச்சினைகள் ஆராயப்பட வேண்டும். தேவைகள் பூர்த்திசெய்யப்படவேண்டும் என்றார்.

(காரைதீவு குறூப், துறைநீலாவணை நிருபர்கள்)