வட்டவளை கரோலினா தோட்ட தொழிற்சாலையை மூடுவதற்கு மக்கள் எதிர்ப்பு

வட்டவளை கரோலினா தோட்டத்தில் அமைந்துள்ள தேயிலை தொழிற்சாலையை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில் இதுவரை முறையாகதான் தொழிற்சாலை இயங்கி கொண்டிருந்தது. இப்போது திடீரென 15 நாட்களுக்கு தொழிற்சாலையை மூட போவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.இவ்வாறு தொழிற்சாலையை மூடுவதற்கு என்ன காரணம் என்பது எங்களுக்கு தெரியாது. அத்துடன் 15 நாட்களுக்கு பிறகு தொழிற்சாலையை திறப்பதற்கான உத்தரவாதம் ஏதும் எங்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே எங்களுக்கு காரணமும் உத்தரவாதமும் வேண்டும். இதுதவிரவும் தாேட்ட தலைவர்களை அழைத்து இதுதொடர்பாக தோட்டம் நிர்வாகம் உரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அதுவும் எங்களுக்கு தெரியாது.

தேயிலை கொழுந்து இருக்கும் காலத்தில் நாங்கள் 20 கிலோ அல்ல 100 கிலோவும் கொண்டு வந்து தருகின்றோம். ஆனால் தற்போது கொழுந்து இல்லாத காலத்தில் எட்டு மணித்தியாலம் வேலை செய்து எவ்வாறு எங்கள் பிள்ளைகளை பாதுகாப்பது? இதுவரை காலம் இல்லாது தற்போது மாத்திரமே எட்டு கிலோ எடுத்தால் 40 வீதம் கொழுந்துக்கான பணத்தை தருவதாக தெரிவிக்கின்றனர். இதைக்கொண்டு நாம் எவ்வாறு குடும்பத்தை கொண்டு செல்வது? எட்டு மணித்தியாலம் வேலை செய்து 300 ரூபாய் கூட கிடைப்பதில்லை. நாங்கள் கொண்டு வரும் சாப்பாட்டுக்கு கூட அவை போதவில்லை. அத்துடன் ஒரு சில வீட்டில் ஒருவர் மாத்திரம் வேலை செய்வோர் கூட இருக்கின்றனர். ஆனால் இவர்கள் கூட இந்த தொழிலைதான் நம்பி இருக்கின்றனர். தோட்டத்தில் எந்தவொரு உதவியும் இல்லை.

தற்போது தொழிற்சாலை மூடுவதற்கான காரணத்தை தான் நாம் கேட்கின்றோம். ஆனால் தோட்ட நிர்வாம் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை வைத்துக்கொண்டு தோட்டத்தை முடக்க போவதாக கதையை கூறிவருகின்றது.

எங்கள் தோட்டத்தில் எவருக்கும் கொரோனா தொற்று ஏதும் ஒன்றுமில்லை.

எனவே எங்களுடைய பிரச்சினை தொடர்பாக தோட்ட முகாமையாளருடன் மாத்திரமே உரையாட முடியும் என்ன காரணத்திற்காக தொழிற்சாலையை மூட நினைக்கின்றனர் என்பதற்கு காரணம் அவர்தான் கூற தரவேண்டும் என தெரிவித்தனர்.

(கினிகத்தேனை தினகரன் நிருபர்)