வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிக்க விசேட திட்டம்

வீசா அனுமதி காலம் 5 வருடமாக நீடிப்பு

வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் வீசா அனுமதிக் காலத்தை 5 வருடங்கள் வரை அதிகரிப்பது உள்ளிட்ட விடயங்களை இலக்காகக் கொண்டு முன்வைக்கப்பட்டுள்ள குடிவரவு குடியகல்வு (திருத்தச்) சட்டமூலம் புதன்கிழமை (22) நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.

இதற்கமைய சட்டமூலத்தை இரண்டாவது வாசிப்புக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இக்குழு இணங்கியது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமை வகிக்கும்பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழு புதன்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் கூடியதுடன், இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான (மேஜர்) பிரதீப் உந்துகொட, சார்ள்ஸ் நிர்மலநாதன், டிரான் அலஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஜெனரல் சரத் ரூபசிறி உள்ளிட்ட அதிகாரிகள் வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

சட்டமூலத்துக்கு அமைய 1984ஆம் ஆண்டு 20ஆம் இலக்க குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் 14வது சரத்து திருத்தத்துக்கு உள்ளாகவிருப்பதுடன், தற்பொழுது வீசா அனுமதியை வழங்கக்கூடிய கால எல்லையான 2 வருடங்களை 5 வருடங்கள் வரை அதிகரிப்பதே இத்திருத்தத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஜெனரல் சரத் ரூபசிறி இங்கு தெரிவித்தார்.

அத்துடன், அமைச்சரின் கட்டளைக்கு அமைய வீசா வழங்கும் காலத்தை 5 வருடங்களிலிருந்து 10 வருடங்கள் வரை மேலும் அதிகரிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், இத்திருத்தத்தின் ஊடாக வதிவிட வீசா முறையை அறிமுகப்படுத்தவிருப்பதாகவும், இது தொடர்பான ஒழுங்குவிதிகள் எதிர்வரும் காலத்தில் தயாரிக்கப்படவிருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. நீண்டகால வீசா அனுமதியை வழங்குவதன் ஊடாக வெளிநாட்டு முதலீட்டு வணிகங்களுக்காக முதலீடு செய்ய மிகவும் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவது உள்ளிட்ட சமூக பொருளாதார நலன்கள் பல கிடைக்கும் என்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் இங்கு தெரிவித்தார்.