சிறைக்கு நேரடியாக விஜயம் செய்து நீதியமைச்சர் ஆராய்வு

சிறைச்சாலை கூரையின் மேல் ஏறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள சிறைக்கைதிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நீதியமைச்சர் அலி சப்ரி நேற்று அங்கு விஜயம் செய்தார்.

பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சிறைக்கைதிகள் சிலர் வெலிக்கடை சிறைச்சாலையில் கூரையின் மீதேறி சில தினங்களாக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.அது தொடர்பில் ஆராய்வதற்காகவே நேற்றைய தினம் நீதியமைச்சர் அங்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன் போது சிறைக் கைதிகளுடன் சுமுகமாக கலந்துரையாடிய அமைச்சர், சிறைக்கைதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

இங்கு சிறைக்கைதிகள் மேல்முறையீடுகள் முன்வைக்கப்படும் போது ஏற்படும் தாமதங்கள், நன்னடத்தை செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள சிறைக்கைதிகளின் தண்டனைகளை குறைத்தல், பொதுமன்னிப்பு வழங்கப்படும் போது அனைத்து சிறைக் கைதிகளுக்கும் ஒரே விதத்தில் முறைமையை ஏற்படுத்தல், சிறைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தொடர்பில் ஆராயும் முறைமை ஒன்றை உருவாக்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

அவர்களின் பிரச்சினைகளுக்கு செவிமடுத்த நீதியமைச்சர் ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு அமைய விரைவாக பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

உடனடியாகவே அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாக தெரிவித்த அவர், தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வரை உண்ணாவிரதத்தை கைவிடுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறைச்சாலைகள் சட்டத்திற்கு அமைவாக அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி நன்னடத்தை சிறைக்கைதிகள் தொடர்பில் ஒரு வாரத்திற்கு விடுமுறை பெற்றுக்கொடுப்பதற்கு சந்தர்ப்பம் உள்ளதாகவும் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்