மகனின் விடுதலைக்காக நாமலிடம் கண்ணீர் விட்ட தாய்

மட்டக்களப்பில் நேற்று சம்பவம்

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனை விடுதலை செய்யுமாறு கோரியும், உடனடியாக இதற்கு தீர்வு ஒன்றை சொல்லிவிட்டு போகுமாறும் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவிடம் தாயொருவர் கண்ணீர்விட்டு அழுத சம்பவம் நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பல அபிவிருத்தி திட்டங்களை மக்கள் பாவனைக்காக கையளிப்பதற்கும், மேற்கொள்ளப்படவுள்ள மேலும் பல அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில்ஆராய்வதற்காகவும் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகனை விடுவிக்குமாறு அந்த தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

வந்தாறுமூலையில் நேற்று இடம்பெற்ற ஒரு நிகழ்வின் போதே நாமல் ராஜபக்ஷவுக்கு மாலை அணிவித்து தனது மகனுக்கான தீர்வினை இவ்விடத்திலே பெற்றுத்தந்துவிட்டுப் போகுமாறு அவர் கண்ணீருடன் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.