அச்சமின்றி பிள்ளைகளுக்கு தடுப்பூசி பெற முன்வரவும்

விசேட மருத்துவ நிபுணர்கள் பெற்றோருக்கு அறிவுரை

கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இன்று முதல் ஆரம்பம்

வீணான கட்டுக்கதைக்குள் சிக்காமல் எந்தவித சந்தேகமுமின்றி பிள்ளைகளுக்கு தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விசேட மருத்துவ நிபுணர்கள் கேட்டுக்கொண்டனர்.

உலக அளவிலும் எமது நாட்டிலுமுள்ள விசேட மருத்துவ நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளுக்கு அமையவே தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அது தொடர்பில் வீண் பயம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

புரிந்துணர்வுடன் செயற்பட்டு தடுப்பூசி மூலம் சாத்தியமான பிரதிபலனை பெற்றுக் கொள்ளுமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி ஊடக மையம் ஏற்பாடு செய்திருந்த வாராந்த செய்தியாளர் மாநாடு வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக நேற்றைய தினம் நடைபெற்றது. தடுப்பூசி வழங்குவதை தொனிப் பொருளாகக் கொண்டு நடைபெற்ற இச் செய்தியாளர் மாநாட்டில் விசேட சிறுவர் மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.

கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் இன்றைய தினம் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் ஆரம்பமாகவுள்ளது. இன்றைய தினம் முதற்கட்டமாக விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

அது தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவரும் சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட மருத்துவருமான டாக்டர் அனுருத்த பாதெனிய கருத்துக்களை முன்வைத்தார்.

சர்க்கரை நோய், சிறுநீரக நோய், இதய நோய், தலசீமியா மற்றும் சுவாசம் தொடர்பான நோய்கள் உள்ளிட்ட தொடர் நோய்களுக்குள்ளாகியுள்ள சிறுவர்களுக்கு முக்கியத்துவமளித்து முதற்கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

இச் சிறுவர்கள் தொடர்ச்சியாக சிகிச்சை பெறுவதற்கு வரும் கிளினிக்குகளுக்கு அவர்களை அழைத்து வந்து அங்கு விசேட மருத்துவர்களின் பரிந்துரைகளுக்கு அமைய பெற்றோர்களின் அனுமதியுடன் தடுப்பூசிகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் 3 பிரிவுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன் 12 –-19 வயதிற்குட்பட்ட தொடர் நோயாளிகளான சிறுவர்களுக்கு முதற்கட்டமாக இன்று தடுப்பூசி வழங்கப்படவுள்ளன. அதனையடுத்து 15- –19 வயதிற்கு ட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதுடன் 12-–15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அதற்கான விசேட பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றதும் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர் சிறுவர்களுக்கு உபாதைகள் ஏற்படுமானால் அதனை தவிர்க்கும் வகையில் மருத்துவர்களின் விசேட கண்காணிப்பின் கீழ் டாக்டர்கள் குழுவொன்று அது தொடர்பில் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வரும். வீடுகளில் அவ்வாறு சிறுவர்களுக்கு ஏதாவது உபாதைகள் ஏற்படுமானால் அது தொடர்பில் வழிகாட்டல்களை பெற்றுக்கொள்வதற்காக நேரடி தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசேட மருத்துவர் பாதெனிய தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்