குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலிலிருந்து ஒதுங்குவேன்

அமைச்சர் பந்துல குணவர்தன சவால்

சதொச நிறுவனத்துக்கு சொந்தமான வெள்ளைப்பூடு மோசடி தொடர்பில் நானோ எனது அதிகாரிகளோ, நுகர்வோர் தொடர்பான அதிகாரசபை பணிப்பாளருக்கு எந்த வகையிலாவது அச்சுறுத்தல் விடுத்ததை ஒப்புவித்தால் அரசியல் இருந்தே விலகிச்செல்வேன்.

இதுதொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளவேண்டும் என பொலிஸ்மா அதிபருக்கு முறையிடுவேன் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

வர்த்தக அமைச்சில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நுகர்வோர் தொடர்பான அதிகாரசபை பணிப்பாளர் தனது பதவியை இராஜினாமா செய்திருக்கின்றார்.

அவர் பதவி விலகுவதற்கு இரண்டு அமைச்சர்களின் அழுத்தங்களே காரணம் என ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றார்.குறிப்பாக சதொச நிறுவனத்துக்கு கொண்டுவரப்பட்ட வெள்ளைப்பூடு தொகையில் இடம்பெற்றிருக்கும் மோசடி தொடர்பான விசாரணைகளில் அவருக்கு அழுத்தங்களை பிரயோகித்ததாகவே குறிப்பிட்டிருக்கின்றார்.

நுகர்வோர் தொடர்பான அதிகாரசபை பணிப்பாளர் பதவி அரசியல் நியமனமாகும். அது நிரந்தரமானதல்ல. இவரை நான் ஒருபோதும் நேரில் கண்டதும் இல்லை. எனது கூட்டங்களுக்கு அழைத்ததும் இல்லை.

நுகர்வோர் தொடர்பான அதிகாரசபை எனது அமைச்சுக்கு கீழ் இல்லை. அது இராஜாங்க அமைச்சுக்கு கீழே இருக்கின்றது. ஆனால் சதொச எனது அமைச்சுக்கு கீழே இருக்கின்றது.

அதனால்தான் சதொச நிறுவனத்துக்கு வந்த வெள்ளைப்பூடு தொகையில் மோசடி இடம்பெற்றிருப்பது தொடர்பான செய்தி கேள்விப்பட்டதுடன் அதுதொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸில் முறையிட்டோம். மாறாக நுகர்வோர் தொடர்பான அதிகாரசபைக்கு முறையிட எந்த தேவையும் எனக்கு இல்லை.

மேலும் 1989 இல் பாராளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவானதில் இருந்து மிகவும் பொறுப்புமிக்க 5 அமைச்சரவை அமைச்சு பதவிகளை வகித்திருக்கின்றேன்.

இதற்கு முன்னரும் வர்த்தக அமைச்சராக இருந்து 13 பொருளாதார மத்திய நிலையங்களை நாடுபூராகவும் அமைத்திருக்கின்றேன். இதுபோன்ற பலகோடி ரூபாவுக்கான வேலைத்திட்டங்களை நான் செய்தபோது, எனக்கு எதிராக ஊழல் மோசடி மற்றும் கப்பம் பெற்ற குற்றச்சாட்டுக்கள் இதுவரை காலமும் யாராலும் தெரிவிக்கப்பட்டதில்லை.

அத்துடன் வெள்ளைப்பூடு மோசடியை மறைப்பதற்காக நான் அல்லது வேறு யாராவது பதவி விலகிய பணிப்பாளரை அச்சுறுத்தி இருந்தால், அதுதொடர்பில் அவர் பொலிஸில் முறைப்பாடு செய்யவேண்டும்.

அதேபோன்று இந்த மோசடியை மறைப்பதற்கு நான் தலையிட்ட முறையை அவர் ஒப்புவிக்கவேண்டும். இதுதொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு முறையிட இருக்கின்றேன்.

எனக்கு எதிராக குற்றச்சாட்டை ஒப்புவித்தால், பாராளுமன்ற பதவியில் இருந்து மாத்திரமல்ல, இலங்கை அரசியலில் இருந்தே விலகுவேன் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்