மூன்று மணி நேரத்தில் PCR சோதனை முடிவு

அதிக கட்டண விடுதிகளுக்கு ஆப்பு

நாட்டில் பாரிய பிசிஆர் பரிசோதனை நிலையம் கட்டுநாயக்க விமானநிலைய வளவில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

மேற்படி பிசிஆர் பரிசோதனை இரசாயன கூடம் அதிநவீன உபகரணங்களுடன் திறக்கப்பட்டுள்ளதுடன் நாள் ஒன்றில் 7,000 பிசி ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு அறிக்கைகளை சமர்ப்பிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இப்பரிசோதனை கூடத்தை ஹொஸ்பினோம் நிறுவனம், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் ஆகியன இணைந்து செயற்படுத்தவுள்ளன. ஹொஸ்பினோம் நிறுவனமானது ஜெர்மன் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் தமது தாய் நிறுவனத்தை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் இப் பிசிஆர் பரிசோதனை கூடம் திறக்கப்பட்டுள்ளதுடன் மணிக்கு 500 பிசிஆர் பரிசோதனைகள் அறிக்கைகளை வெளியிட முடியுமென்றும், ஒருநாளில் 7,000 பிசிஆர் அறிக்கைகளை வெளியிடுவதற்கான வசதிகள் காணப்படுவதாகவும் இங்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

முழு உலகமும் கொரோனா வைரஸ் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ள இச் சந்தர்ப்பத்தில் இலங்கையில் சுகாதார அமைச்சும் அதற்கான தீர்வை ஆராய்ந்து வருவதாகவும்தெரிவித்த அமைச்சர் , இத்தகைய சூழ்நிலையில் பொருளாதார கேந்திர நிலையங்களை பாதுகாத்து அவற்றை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். அதற்காக முறையான கொள்கை அடிப்படையில் சிறந்த தீர்வுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்