இஸ்லாத்தின் பார்வையில் சமூக வலைத்தள பாவனை

அல்லாஹு தஆலா மனிதனுக்கு வழங்கியுள்ள ஆற்றல்கள், திறமைகள் மற்றும் வளங்களின் அடிப்படையில் அவற்றின் வெளிப்பாடுகள் காலத்திற்கு காலம் பல்வேறுபட்டதாக அமைந்து வருவதைக் காணலாம். அந்த வகையில் இன்றைய நவீன யுகத்தில் சமூக வலைத்தளங்கள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அதன் தாக்கமும் செல்வாக்கும் மனித வாழ்வில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்தாக உள்ளன. அந்தளவுக்கு சக்தி மிக்கதாக விளங்குகின்றது சமூக வலைத்தளங்கள்.

அந்த வகையில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹாதிர் முஹம்மத் ஒரு தடவை, '19ஆம் நூற்றாண்டில் யாரிடம் கடற்படை இருந்ததோ அவர்கள்தான் அந்நூற்றாண்டின் பலம் மிக்க சக்திகள், 20 ஆம் நூற்றாண்டில் யாரிடம் விமானங்கள் இருந்ததோ அவர்கள் தான் அந்நூற்றாண்டின் பலம் மிக்க சக்திகள், 21 ஆம் நூற்றாண்டில் யாரிடம் ஊடகம் உள்ளதோ அவர்கள் தான் அந்நூற்றாண்டின் பலமான சக்திகள்' என்று குறிப்பிட்டார்.

அது தான் உண்மை. அந்த உண்மையை இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட ஊடகங்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

என்றாலும் முஸ்லிம்களாகிய நாம் எப்போதும் எல்லா விடயங்களிலும் மார்க்க வழிகாட்டலின் அடிப்படையிலேயே எமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொழில்நுடபம், சமூக வலைத்தளகள் உள்ளிட்ட ஊடகங்கள் வளர்ந்து வியாபித்துள்ள போதிலும் கூட, எமது செயல்பாடுகள் அனைத்தையும் மார்க்க வழிகாட்டல்களுக்கு அமையவே அமைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் இம்மையிலும், மறுமையிலும் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இந்தப் பின்னணியில் சமூக வலைத் தளங்கள் பாரிய வளர்ச்சியடைந்துள்ள இன்றைய சூழலில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்ப இஸ்லாம் வழங்கியுள்ள வழிகாட்டல்களைக் கடைபிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது. அந்த வகையில் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட ஊடகங்களைப் பாவிப்பது தொடர்பில் இஸ்லாம் வழங்கியுள்ள வழிகாட்டல்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

அதாவது,

1. தகவல்களை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளல்.
ஊடகவியலாளர் அல்லது சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்துபவர் தமக்குக் கிடைக்கப்பெறும் எந்தவொரு தகவலையும் ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளாதவரை அவற்றை வெளியிடலாகாது.

இது தொடர்பில் அல்லாஹ்தஆலா, 'முஃமின்களே! உங்களிடம் ஒரு பாவி ஒரு செய்தியை எடுத்து வந்தால் (அதனை) தீர விசாரித்து தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள். அப்படியில்லாத பட்சத்தில் நீங்கள் அறியாமையின் காரணமாக ஒரு சமூகத்தை பாதிக்கும் முடிவுகளுக்கு வந்துவிடக் கூடும். அப்போது நீங்கள் செய்ததை நினைத்து கைசேதப்படுவீர்கள்.' (அல் குர்ஆன 49:06) என்று குறிப்பிட்டுள்ளான்.

அத்தோடு முஹம்மத் (ஸல்) அவர்கள், 'ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும்' என்றார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம்)

இங்கு சுட்டிக்காட்டிய அல் குர்ஆன் வசனமும் நபிமொழியும் ஓர் ஊடகவியலாளர் அல்லது சமூக வலைத்தளப் பாவனையாளர், ஒரு தனிநபரைப் பற்றியோ அல்லது ஒரு நிறுவனத்தைப் பற்றியோ ஏதேனும் ஆதாரதமற்ற செய்திகள், வதந்திகள் சமுதாயத்தில் உலாவரும் போது அவற்றை நன்கு ஆராய்ந்து விசாரித்து மார்க்க வழிகாட்டல்களுக்கு ஏற்ப உறுதிப்படுத்திக் கெகாள்ளதது, அதனை உண்மைப்படுத்துவதும், ஏனையவர்களுக்கு கூறுவதும் பெரும்பாவம் என்பதை எடுத்தியம்புகின்றன.

இருந்தும் கூட தற்போதைய சூழ்நிலையில் ஒரு சிலர் தமது சுய நோக்கங்களுக்காகத் தாங்கள் சமூக சீர்திருத்தவாதிகள் என்று நினைத்து தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை குறிவைத்துத் தாக்கி, பொய்யானதும், போலியானதுமான செய்திகளை சமூக ஊடகங்களில் பரவ விடுகின்றனர். இதன் ஊடாக சிலரது மானம் மரியாதையில் விளையாடுவதையும் அதற்கு ஏனையவர்கள் கருத்துரைப்பதையும் காண முடிகின்றது. இச்செயல் மார்க்க ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் முற்றிலும் தவறானதாகும். அத்தோடு குடும்ப ரீதியாகவும், சமூக ரீதியாகவும் கூட சீர்கேடு ஏற்படவும் வழிவகுக்கும். இவற்றின் விளைவாக நாளை மறுமை நாளில் நன்மைகளையே இழக்க நேரிடும். அதனால் இவ்விடயத்தில் மிகவும் விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் நடந்து கொள்ள வேண்டியது அவரவர் பொறுப்பாகும்.

2. அச்சமூட்டும் தகவல்களை உரிய தரப்பின் கவனத்திற்கு கொண்டு செல்லல்.
பாதுகாப்பு தொடர்பிலான தகவல்கள் மற்றும் அச்சமூட்டும் செய்திகள் கிடைக்கப்பெற்றால் அவற்றை மக்களிடயே பரப்புவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் அத்தகவல்கள் தொடர்பில் உரிய தரப்பினரின் ககவனத்திற்கு கொண்டு செல்லத் தவறக்கூடாது. இதனையும் அல்லாஹ் அல் குர்ஆனில் குறிப்பிட்டு வைத்திருக்கின்றான்.

அதாவது, 'பயத்தையோ, (பொது மக்கள்) பாதுகாப்பையோ பற்றிய யாதொரு செய்தி அவர்களுக்கு எட்டினால், (உடனே) அதனை (வெளியில்) கூற ஆரம்பித்து விடுகின்றனர். (அவ்வாறு செய்யாது) அதனை (அல்லாஹ்வுடைய) தூதரிடமும், அவர்களுடைய அதிகாரிகளிடமும் (மட்டும்) தெரிவித்தால், அதிலிருந்து ஊகிக்கக்கூடிய அவர்கள் உண்மையை நன்கறிந்து (தக்க நடவடிக்கைகளை எடுத்துக்) கொள்வார்கள்.
(அல் குர்ஆன் 04:83)

இந்த வசனத்தின் படி தலைமைகளோடும், அதிகாரிகளோடும் சம்மந்தப்பட்ட விடயங்களை அவர்களிடம் தான் தெரிவிக்க வேண்டும். அவ்வாறான விடயங்களை மக்கள் மத்தியில் பரப்பக் கூடாது. அது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய விடயமாகும். உதாரணமாக பிறை தென்பட்டதை அறிவிப்பதைக் குறிப்பிடலாம். அச்செய்தியை மக்களுக்கு அறிவிப்பதற்கு முன்பு உரியவர்களிடம் அறிவித்தால் அவர்கள் உரிய முடிவை எடுப்பவர். இதன் ஊடாக சமூகத்தின் ஒற்றுமையையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

3. எழுதினாலும், பேசினாலும், பரப்பினாலும் பதியப்படும்
இது தொடர்பில் அல்லாஹுதஆலா,'(மனிதன்) எதைக் கூறிய போதிலும் அதனை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. (அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகின்றது.)
(அல் குர்அன் 50:18)

அதனால் ஒரு முஸ்லிமைப் பொருத்தவரையில் எச்சந்தர்ப்பத்திலும் அல்லாஹுதஆலா கூறும், இவ்வசனத்தை தனது உள்ளத்தில் நிலைத்திருக்கச் செய்வது ஈமானின் ஒரு பகுதியாகும்

4. ஞானமும் சமயோசிதமும்
நாம் சில தகவல்களை பரிமாறும் போதும், நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் போதும் நுண்ணறிவு மற்றும் உளவியல் அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது இஸ்லாத்தில் ஆர்வமுட்டப்பட்டுள்ள விடயமாகும்.

'நபியே! நீர் உமது இரட்சகனின் பாதையின் பால் (ஹிக்மா) அறிவு ஞானத்தை பிரயோகித்தும் அழகிய உபதேசங்களை கொண்டும் அழைப்பு விடுப்பீராக'
(அல் குர்ஆன் 16:125)

இந்த வசனத்தின் படி அறிவும், அழகிய உபதேசங்களும் இன்றியமையாததாகும்.

5. தகவல்களில் திரிபுகளை மேற்கொள்ளாதிருத்தல்
எமக்கு கிடைக்கப்பெறக் கூடிய தகவல்களிலும் செய்திகளிலும் திரிபுகளை ஏற்படுத்தவோ கூட்டல் குறைத்தல்களை மேற்கொள்ளவோ கூடாது. மாறாக உள்ளதை உள்ளபடியே மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

இவற்றை விடவும் ஊடகவியல், சமூக வலைத்தள பாவனைகள் தொடர்பில் இன்னும் பல ஒழுக்கங்களையும், வழிகாட்டல்களையும் அல் குர்ஆனும் நபிமொழிகளும் வழங்கிக் கொண்டிருக்கின்றன. அதனால் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஊடகங்கள் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பாவனையின் போது இவ்விடயங்களில் கவனம் செலுத்தி செயற்படுவது மிகவும் அவசியம்.

அவற்றின் ஊடாக சமூகத்தில் ஏற்படக்கூடிய தீங்குகளை கட்டுப்படுத்தக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இதற்கு வல்ல அல்லாஹ் எமக்கு துணை புரிந்திடட்டும்.

ஏ.எச்.எம். மின்ஹாஜ், முப்தி (காஷிபி)