இனநல்லிணக்கத்தின் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதியின் உரை

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் ஆற்றிய உரையானது

இலங்கையில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியிலும் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது. உள்நாட்டில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டிய அவசியத்தை தனது உரையின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியிருக்கின்றார். அது மாத்திரமன்றி அத்தகைய முயற்சிகளுக்காக ஐக்கிய நாடுகள் உட்பட சர்வதேசத்தின் நல்லாதரவையும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.

இனப்பாகுபாடு, மதம் மற்றும் பாலின வேறுபாடுகளின்றி அனைத்து இலங்கையர்களுக்கும் வளமானதும் நிலையானதும் பாதுகாப்பானதுமான எதிர்காலத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகுமென்றும், இந்தச் செயற்பாட்டுக்காக, அனைத்து உள்ளூர் பங்குதாரர்களுடன் இணைந்து சர்வதேசப் பங்குதாரர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் நேற்றுமுன்தினம் உரையாற்றுகையில் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அதேசமயம், இலங்கையின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புதல் மற்றும் தேசிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களைச் செயற்படுத்தும் போது, சர்வதேச சமூகத்தினரின் ஒத்துழைப்பை இலங்கை அன்புடன் வரவேற்பதாகவும், நீடித்த சமாதானத்தை நாட்டுக்குள் ஏற்படுத்திக் கொள்ள, தேசிய நிறுவனங்களினூடான பொறுப்புக் கூறல், மறுசீரமைக்கப்பட்ட நீதி மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உரையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

நீண்ட கால இனமுரண்பாடுகளாலும், முப்பது வருட கால உள்நாட்டுப் போராலும் கடந்த காலத்தில் பாதிக்கப்பட்ட இலங்கைக்குள், இனங்களுக்கிடையில் ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதில் ஜனாதிபதி வெளிப்படுத்தியிருக்கும் விசேட அக்கறையானது சர்வதேச மட்டத்தில் பெரிதும் பாராட்டைப் பெற்றுள்ளது. அதாவது சர்வதேசம் நீண்ட காலமாக இலங்கை விடயத்தில் அக்கறை செலுத்தி வருகின்ற விடயத்தின் மீது இன்றைய அரசாங்கமும் விசேட கவனம் செலுத்தியிருப்பது சர்வதேசத்தின் பாராட்டைப் பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் ஐ.நா உரை தொடர்பாக சர்வதேச ரீதியில் முக்கியஸ்தர்கள் பலர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். உள்நாட்டிலும் இனமத பேதங்களுக்கு அப்பால் முக்கியஸ்தர்கள் பலர் பாராட்டுத் தெரிவித்திருக்கின்றனர். இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் உருவாக்கப்பட்டாலேயே நாட்டில் நிரந்தர சமாதானத்தையும், அபிவிருத்தியையும் கட்டியெழுப்ப முடியுமென்பதே இவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.

இது ஒருபுறமிருக்க, உலக பெருந்தொற்றான கொவிட் பரவுதலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இலங்கை மேற்கொண்டுள்ள தடுப்பூசித் திட்டம் குறித்தும் ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக் காட்டியுள்ளார். ‘அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடாக உள்ள போதிலும், தடுப்பூசி ஏற்றல் வேலைத் திட்டத்தில், இலங்கை வெற்றி கண்டுள்ளது. 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், முழுமையானளவில் தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதிக்குள் இலங்கையில் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், முழுமையான அளவில் தடுப்பூசி ஏற்றப்படும். அதேசமயம் மிக விரைவில், 15 வயதுக்கு மேற்படி சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தையும் ஆரம்பிக்கவுள்ளோம்’ என்று ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தொடரில் தனது உரையின் போது எடுத்துக் கூறியுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.

கொவிட் பேரிடரில் இருந்து உலகம் மீண்டெழுவதற்கான ஒரேயொரு வழியாக தடுப்பூசியே சர்வதேச மருத்துவ நிபுணர்களால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இலங்கையானது தடுப்பூசி ஏற்றும் திட்டத்தில் குறுகிய காலத்தினுள் வெற்றி இலக்கை அடைந்துள்ளது. ஜனாதிபதியின் தனிப்பட்ட விசேட அக்கறையும், அரசாங்கம் மற்றும் மருத்துவ சுகாதாரத் துறையினர், பொலிசார், பாதுகாப்புப் படையினர், சமூகநல நிறுவனங்களின் பணியாளர்களின் முழுமையான ஒத்துழைப்பின் மூலமே தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் இலங்கையினால் வெற்றி இலக்கை அடைய முடிந்தது. இதனையே சர்வதேசத்திடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்துக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தனது உரையின் போது உலக ரீதியில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாதத்தை வெற்றி கொள்வதற்காக புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அத்தியாவசியமாகின்றது. வன்முறைச் சம்பவங்கள் இலங்கையில் மீண்டும் இடம்பெறாதென்பதை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது என்பதை வலியுறுத்தியுள்ளார் ஜனாதிபதி.

நாட்டில் இனஐக்கியத்தின் ஊடாகவே நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியும். இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சர்வதேசத்திடம் ஜனாதிபதி தனது உரையில் தெளிவாக முன்வைத்துள்ளார். இந்த அழைப்பை புலம்பெயர் அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் கவனத்தில் கொண்டு பயனுறுதியான முயற்சிகளை முன்னெடுப்பதே இன்றைய நிலையில் அவசியமாகும்.