அமெரிக்க - பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு இரத்து

அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய நாட்டுப் பொதுச் சபைக் கூட்டத்திற்கிடையே அந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமைச்சர்களின் கால அட்டவணை பொருந்தாமல் போனதால் சந்திப்பு இரத்து செய்யப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டனர். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அன்டனி பிளிங்கனும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரும் உச்ச நிலை கூட்டத்திற்கு இடையே 3 முறை சந்திக்கத் திட்டமிட்டனர். இரு நாட்டிற்கும் இடையே கடந்த வாரம் ஏற்பட்ட இராஜதந்திர சர்ச்சைக்குப் பின்னர் அவர்கள் முதன்முறை சந்திக்கவிருந்தனர்.

டீசல் நீர்மூழ்க்கிக் கப்பல்களை வாங்கும் ஒப்பந்தத்தை அவுஸ்திரேலியா இரத்து செய்ததால் பிரான்ஸ் சினம் கொண்டுள்ளது.

ஒப்பந்தத்தை இரத்து செய்த அவுஸ்திரேலியா, அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க அமெரிக்காவுடனும் பிரிட்டனுடம் புதிய ஒப்பந்தத்தைச் செய்துகொண்டது.  

இது தொடர்பில் அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவுடன் பிரான்ஸ் முறுகலில் இருப்பதோடு இரு நாடுகளுக்குமான தூதுவர்களையும் திரும்ப அழைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.