பிரேசில் நாட்டு ஜனாதிபதிக்கு உணவகத்தில் அனுமதி மறுப்பு

அமெரிக்கா சென்றுள்ள பிரேசில் ஜனாதிபதி போல்சனேரோ தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தால் உணவு விடுதிக்குள் அனுமதி மறுக்கப்பட்டு வீதியோர உணவகத்தில் உணவருந்தும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயோர்க் சென்றுள்ள பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனேரோ, தன் சக அமைச்சர்களுடன் சேர்ந்து இரவு நேர உணவுக்காக விடுதி ஒன்றுக்குள் நுழைந்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. போல்சனேரோ உள்ளிட்ட தலைவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென நியூயோர்க் மேயர் பில் டி பிளாசியோ அறிவுறுத்தினார். கொரோனா தொற்றை ஒரு சாதாரண காய்ச்சல் என்று குறைத்து மதிப்பிட்டு கருத்துக் கூறிவரும் போல்சனேரோவுக்கு கடந்த ஆண்டு அந்த நோய்த் தொற்று ஏற்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தார்.