அணு விவகாரம் பற்றி பேச ஈரான் விருப்பம் தெரிவிப்பு

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரயீசி, உலக வல்லரசுகளுடன் அணுவாற்றல் குறித்த பேச்சுவார்த்தையைத் தொடர விரும்புவதாகக் கூறியுள்ளார்.

ஈரானுக்கு எதிரான தடை உத்தரவுகளை நீக்குவதே அதன் நோக்கம் என்றார் அவர். அந்தத் தடை உத்தரவுகள் அடக்குமுறைக்கு நிகரானவை என்று அவர் கூறினார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில், பதிவுசெய்யப்பட்ட காணொளி வழி பேசிய ரயீசி, ஈரானின் பாதுகாப்புக் கொள்கையில் அணுவாயுதங்களுக்கு இடமில்லை என்று மீண்டும் வலியுறுத்தினார்.

ஈரானுக்கு எதிரான அதிகபட்ச அடக்குமுறை தொடர்பில் அமெரிக்காவை அவர் சாடினார்.

கொரோனா வைரஸ் தொற்றுச் சூழலின்போது தடை உத்தரவுகளை விதிப்பது குறிப்பாக மருந்துகள் மீது விதிப்பது மனித இனத்திற்கு எதிரான போர்க் குற்றம் என்று ரயீசி கூறினார்.

அமெரிக்காவுடன் பேச்சைத் தொடர ஈரான் விரும்புகிறது. ஆனால் அது எப்போது என்பது பற்றித் திட்டவட்டமாக ஈரான் எதுவும் குறிப்பிடவில்லை.