விரைவு உணவுகளுடன் ஒக்லாந்து நகருக்கு செல்ல முயன்றோர் கைது

பொது முடக்கம் அமுலில் உள்ள நியூஸிலாந்தின் ஒக்லாந்து நகருக்குள் காரின் பின்புறம் நிறைய கே.எப்.சி உணவுடன் நுழைய முயன்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் சுமார் 100,000 டொலர் ரொக்கமும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவரும் ஒக்லாந்து எல்லைக்கு அருகே, பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து தப்ப முயன்றதாகக் கூறப்படுகிறது. காரைச் சோதித்தபோது, உணவும் ரொக்கமும் கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்கள் இந்த உணவுகளை விற்பதற்கு அல்லது தமது பயன்பாட்டுக்கு எடுத்துச் சென்றார்களா என்பது உறுதி செய்யப்படவில்லை. சுமார் ஒரு மாதமாக, ஒக்லாந்து கடுமையான முடக்கநிலையில் உள்ளது. அங்கு உணவகங்களைத் திறக்கவோ உணவுப் பொருட்களை விநியோகிக்கவோ அனுமதி இல்லை.

அத்தகைய சூழலில், விரைவு உணவு மதிப்புமிக்க ஒன்றாகலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த வாரம், மக்டொனால்ட்ஸ் உணவகத்தைத் தேடி ஒக்லாந்து எல்லையைக் கடந்ததாக ஓர் ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

பிடிபட்ட இருவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 6 மாத சிறைத் தண்டனையோ 4,000 டொலர் வரை அபராதமோ விதிக்கப்படலாம்.