இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணி விசேட பயிற்சிக்காக சவூதி பயணம்

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் பதினாறாம் திகதி வரை மாலைதீவில் நடைபெறவுள்ள தெற்காசிய கால்பந்தாட்டச் சம்மேளன சம்பியன் கிண்ணப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் தனது பயிற்சிகளை மேற்கொண்டிருந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணி வெளிநாடொன்றிலும் விசேட பயிற்சியை மேற்கொள்வதற்காக கடந்த சனிக்கிழமை சவூதி அரேபியா நோக்கி பயணமாகியுள்ளது.

சவூதி அரேபிய கால்பந்து சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பயிற்சியானது நடைபெறவுள்ள தெற்காசிய கால்பந்தாட்டச் சம்மேளன போட்டிகளுக்கும் இலங்கை, மாலைதீவு, வங்காளதேசம் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நான்கு நாடுகளுக்கிடையே இந்த ஆண்டின் இறுதியில் இலங்கையில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள போட்டிகளுக்கும் பெரும் நன்மையளிப்பதாக அமையும்.

சவூதி அரேபியா கால்பந்து சம்மேளனம் இந்த பயிற்சித் திட்டத்தை ஏற்பாடு செய்து அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்கின்றது. மேலும், இப்பயிற்சிக்குத் தேவையான வழிகாட்டல்களை இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் மேற்கொள்கின்றார்.

(திருகோணமலை குறூப் நிருபர்)