ஓட்டமாவடியில் மனித உயிர்களை காவு கொள்ளும் தண்டவாளம்!

ஓட்டமாவடி பாலத்தருகில் ரயில் தண்டவாளத்துக்கு குறுக்காக செல்கின்ற வீதியில் அடிக்கடி விபத்துகள் இடம்பெறுகின்றன. ஓட்டமாவடியில் இரண்டு பாலங்கள் காணப்படுகின்றன. ஒரு பாலம் புகையிரத வண்டி மாத்திரம் செல்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. அது பழைய பாலம். அதன் அருகே அமைக்கப்பட்டுள்ள புதிய பாலத்தினால் பாதசாரிகள், மற்றும் வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறது.

புதிய பாலத்தால் முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளில் பயணிப்போரே கூடுதலாக விபத்துக்குள்ளாகின்றனர். குறித்த இடத்தில் காபட் வீதி வளைந்து செல்லும் பகுதியாக காணப்படுகிறது. அதில் தண்டவாளம் காபட் வீதியில் இருந்து சற்று உயரமாகக் காணப்படுவதால் அதில் பயணிக்கும் வாகனங்கள் வழுக்கிக் கொள்வதால் விபத்துக்குள்ளாகின்றன.

தண்டவாளத்துக்கு குறுக்காக அமைந்துள்ள காபட் வீதி சரி செய்யப்பட்டால் குறித்த இடத்தில் விபத்துகளை தடுக்க முடியும் என்று பலராலும் சுட்டிக் காட்டப்படுகிறது. தூர இடங்களில் இருந்து வாகனத்தில் வேகமாக வருவோர் இந்த இடத்தின் ஆபத்து தெரியாமல் விபத்துக்களில் சிக்கிக் கொண்ட சம்பவங்கள் ஏராளம் உள்ளன.

அந்த இடத்தில் ஏனைய காலங்களை விட மழை காலங்களில் கூடுதலாக விபத்துக்கள் இடம்பெறுகின்றன. குறித்த பகுதியைக் கடந்துதான் வாழைச்சேனை கடதாசி ஆலை, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம், காவத்தமுனை வைத்தியசாலை மற்றும் வயல் நிலங்கள், அரிசி ஆலைகள், பாடசாலைகள் உட்பட ஏராளமான முக்கிய இடங்கள் அமைந்துள்ளன. அந்த இடத்தில் ஏராளமான விபத்துச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இவ்வாறு மனித உயிர்களை காவு கொள்ளும் அந்த இடத்தை பாதுகாப்பான முறையில் புனர்நிர்மாணம் செய்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அத்துடன் இரவு நேரங்களில் இருளில் சூழ்ந்துள்ள அந்த இடத்திற்கு மின்விளக்குகள் பொருத்தப்பட வேண்டும். குறித்த இடத்தினால் பயணிகள் அவதானமாக பயணிக்க வேண்டும் என்று எச்சரிக்கை அறிவித்தல் பலகை ஒன்றை வைக்க வேண்டும் என்று பலரும் தெரிவிக்கின்றனர்.

எச்.எம்.எம்.பர்ஸான்
மீராவோடை