மாத்தளை சாஹிரா கல்லூரி முன்னாள் மாணவன் Royal Society of Biology அங்கத்தவராகத் தெரிவு

பார்கின்சன் நோய்க்கான மருந்தொன்றை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்

தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வசிப்பவரும், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தொழில் புரிபவருமான பேராசிரியர் முஹம்மது ப(F)ரீஸ் மீராசாஹிப் உயிரியலுக்கான ரோயல் சமூகத்தின் (Royal Society of Biology) அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அறிவியல் துறையில் அதி உயர் கௌரவமாகக் கருதப்படும் இந்த அங்கத்துவமானது மருத்துவ விஞ்ஞானத் துறைக்கான அவரது மகத்தான பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்டதாகும்.

பேராசிரியர் முஹம்மது ப(F)ரீஸ் தனது பட்ட மற்றும் பட்டப்பின் படிப்பை ஐக்கிய இராச்சியத்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றார். 2006ஆம் ஆண்டு அவர் இளம் விஞ்ஞானிக்கான ஆண்டு விருதைப் பெற்றுக் கொண்டதோடு, பிரித்தானியப் போட்டியாளர்கள் குழாமிலிருந்து தனது ஆய்வு பற்றி ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்றத்தில் முன்வைப்பு ஒன்றைச் செய்யவும் தெரிவு செய்யப்பட்டார். ஒரு விஞ்ஞானி என்ற வகையில் பேராசிரியர் ப(F)ரீஸ், மருத்துவ விஞ்ஞானத் துறைக்கு அளப்பரிய பங்களிப்புகளைச் செய்துள்ளார். மார்பகப் புற்றுநோய், கருவளம், மூளை நரம்பு உயிரணுப் புற்றுநோய், குருதிப் புற்றுநோய் மற்றும் பார்கின்சன் நோய் ஆகியன பற்றிய அவரது ஆய்வுகள் அவற்றுள் குறிப்பிடத்தக்கவையாகும். HIV, EIAV மற்றும் SIV போன்ற வைரஸ்களைப் பயன்படுத்தி, தவறான மரபணுக்கள் காரணமாக ஏற்படும் நோய் அறிகுறிகளை இல்லாமலாக்குவதற்கான அல்லது குறைப்பதற்கான செயற்றிறன்மிக்க மரபணுக்களை உருவாக்கும் மரபணு சிகிச்சை முறைமைகளை வடிவமைப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

அவரது அண்மைய வெற்றிகரமான பங்களிப்பு யாதெனில், சிறுவர்கள் மற்றும் இளம் வளர்ந்தோர் ஆகியோரைப் பாதிக்கும் நிணநீர்க் குழிய குருதிப் புற்றுநோய்க்கான (Lymphoblastic Leukaemia ) சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மரபணு சிகிச்சை மருந்தை கண்டுபிடித்தமையாகும். மேலும், தற்போது அவர் பார்கின்சன் நோய்க்கான இது போன்ற மருந்தொன்றை உருவாக்கும் முயற்சியிலும் விஞ்ஞானிகள் குழுவொன்றுடன் இணைந்து ஈடுபட்டுள்ளார்.

மேலும், தற்போது உலகளாவிய அளவில் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் பெண்களின் மாதவிடாய் நிறுத்தத்தின் ஆரம்பம் பற்றி கண்டறிவதற்கான திரையிடல் முறைமையை வடிவமைத்தவரும் அவரே. பேராசிரியர் முஹம்மது ப(F)ரீஸ், மாத்தளை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவன் ஆவார்.