பேத்தாழை பொதுநூலகத்தின் நிலாமுற்றம் இலக்கிய ஒன்றுகூடல்

வாழைச்சேனை பிரதேசத்தின் இலக்கிய ஆளுமைகள் இருவரின்  பணிகளுக்கு பாராட்டு

இலக்கிய ஆய்வாளர்கள், இலக்கிய விமர்சகர்கள், பேச்சாளர்கள், இலக்கியப் படைப்பாளிகள் ஆகியோரை வெளியுலகுக்கு அறிமுகம் செய்வதை நோக்காகக் கொண்டு வாழைச்சேனை பிரதேசத்தின் பேத்தாழை பொதுநூலகத்தால் முன்னெடுக்கப்படும் அரியதொரு நிகழ்வு 'நிலா முற்றம்' ஆகும்.

பேத்தாழை பொதுநூலகத்தின் ஏற்பாட்டில் மாதாந்தம் பௌர்ணமி தோறும் இடம்பெறும் 'நிலா முற்றம்' இலக்கிய ஒன்றுகூடல் நிகழ்வானது இம்முறையும் முழுமதி தினமான கடந்த 2021.09.20 திங்கட்கிழமையன்று சிறப்பாக இடம்பெற்றிருந்தது. முன்னர் நேரடியாக பொதுநூலக முன்றலில் இடம்பெற்று வந்த இந்நிகழ்வானது, தற்போது நிலவும் கொவிட் தொற்று அசாதாரண சூழ்நிலை காரணமாக இம்முறை மெய்நிகர் (zoom) வழியாக இடம்பெற்றது.

7ஆவது நிலா முற்ற நிகழ்வாக அமைந்த இம்மாத நிகழ்வில், கோறளைப்பற்று பிரதேசத்தின் மூத்த கலைஞர்களான எழுத்தாளர் சிவநெறிப் புரவலர் பெ.புண்ணியமூர்த்தி (ஓய்வுநிலை அதிபர்) பற்றியும், எழுத்தாளர் கலாபூசணம் மெத்தியேஸ் ஹெட்டியாராச்சி பற்றியும் உரைகள் நிகழ்த்தப்பட்டதுடன், 30 இற்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

சிவநெறிப் புரவலர் பெ.புண்ணியமூர்த்தி ஐயா பற்றி கருத்துரை வழங்கிய பேச்சாளர் திருமதி. சோபா ஜெயரஞ்சித் பற்றிய அறிமுகத்தை கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஜீ.பால்ராஜ் வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து எழுத்தாளர் சிவநெறிப் புரவலர் பெ.புண்ணியமூர்த்தி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சமுதாய, ஆன்மீக, இலக்கியப் பணிகள் குறித்த பகிர்வினை கோறளைப் பற்றுப் பிரதேச சபைத் தவிசாளரும் ஆசிரியையுமான திருமதி. சோபா ஜெயரஞ்சித் முன்வைத்திருந்தார்.

“கோறளைப்பற்று பிரதேசத்தில் எழுத்தாளர் சிவநெறிப் புரவலர் பெ.புண்ணியமூர்த்தி ஐயாவின் பணிகள் காத்திரமானவை ஆகும். அவரது படைப்புகளான நவக்கிரக அர்ச்சனைத் தொகுப்பு, வாழைச்சேனைப் பிரதேசத்து திருத்தலப் பஜனைப் பாடல்கள் - பகுதி 1, வாழைச்சேனைப் பிரதேசத்து திருத்தலப் பஜனைப் பாடல்கள் - பகுதி 2 என்பன நம் மக்களுக்குப் பயன்தரத்தக்கவை” எனப் பாராட்டினார்.

வாழைச்சேனை பிரதேசத்தில் ஆசிரியராக, அதிபராக, சமூக ஆர்வலராக அவர் ஆற்றியுள்ள பணிகளின் தனித்துவம், முக்கியத்துவம் பற்றியும் இந்நிகழ்வில் பலராலும் கருத்துரை வழங்கப்பட்டது.

அதனையடுத்து கலாபூசணம் மெத்தியேஸ் அவர்கள் பற்றி கருத்துரை வழங்கிய பேச்சாளர் செல்வி உதயகுமார் ரெமிலா பற்றிய அறிமுகத்தை கிழக்குப் பல்கலைக்கழக மாணவியும் இலக்கியப் படைப்பாளியுமாகிய செல்வி தமிழூராள் அனுஸ்திகா வழங்கியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து எழுத்தாளர் கலாபூசணம் மெத்தியேஸ் ஹெட்டியாராச்சி ஐயாவின் வாழ்வும் எழுத்தும் பற்றிய கருத்துரை வழங்கப்பட்டது. இவரின் வாழ்க்கை வரலாறு பற்றிய கருத்துரையை கிழக்கு பல்கலைக்கழக கலைமாணிப் பட்டதாரியும் இலக்கிய ஆர்வலரும் சமூக ஆர்வலருமான செல்வி உதயகுமார் ரெமிலா நிகழ்த்தியிருந்தார். மெத்தியேஸின் கவிதை மற்றும் சிறுகதைகள் மீதான வாசிப்பனுபவம் பற்றி த.ஷர்மிதன் பதிவு செய்திருந்தார்.

மெத்தியேஸின் கடவுளே, நிலவே முதலான கவிதைகளினதும் சந்தேகம், அன்பின் பரிசு, தேடல்கள் முற்றும் முதலான சிறுகதைகளினதும் பல்பரிமாணங்கள் குறித்து கருத்துரை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பலரும் இவ்விரு ஆளுமைகள் பற்றியும் தமது அனுபவப் பகிர்வுகளை முன்வைத்திருந்தனர். பிரதேசப் படைப்பாளியும் ஆசிரியருமான எ.ஜெயரஞ்சித், இவ்விரு ஆளுமைகளுடனான நேரடித் தொடர்பு பற்றியும் அவர்களது பணிகளின் முக்கியத்துவம் குறித்தும் கருத்துகளை முன்வைத்திருந்தார்.

அத்தோடு வாழைச்சேனையைச் சேர்ந்தவரும், யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக தற்போது கடமையாற்றுபவருமான கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு இவ்விரு ஆளுமைகள் தொடர்பாக தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

மேலும், இவ்விரு ஆளுமைகள் மற்றும் நிலா முற்ற நிகழ்வு தொடர்பாக பாஸ்கரன், பிரசாந்த்த, புனிதமலர், சதுஸ்காந்த் முதலானோரும் தமது கருத்துரைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

த.கி.ஷர்மிதன்...

வாசகர் வட்ட உறுப்பினர்,

பேத்தாழை பொதுநூலகம்