75 வருட பவளவிழா கொண்டாடும் சிரேஷ்ட ஊடகவியலாளர் நிலாம்

தினகரன், வீரகேசரி, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளில் சிரேஷ்ட பத்திரிகையாளராகக் கடமையாற்றிய எம்.ஏ.எம். நிலாம் நேற்று தனது 75 ஆவது பிறந்த தினமான பவளவிழாவை கொண்டாடினார். ஊடகத்துறையில் எம்.ஏ.எம். நிலாம் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி, இறுதியாக தினகரன் ஆசிரியர் பீடத்தில் ஆலோசகராக கடமையாற்றி ஓய்வு பெற்றார்.

ஆளுமையான திறமையுள்ள பத்திரிகையாளராகப் போற்றப்படுபவர் அவர். பத்திரிகைத்துறையில் மாத்திரமன்றி கலைஇலக்கியத் துறையிலும் ஆழமான தடம் பதித்தவர் நிலாம். இன ஐக்கியத்தை, சமூக நல்லிணக்கத்தை, பரஸ்பர ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதில் நிலாம் தனது எழுத்துத் துறையை நன்றாகப் பயன்படுத்தினார்.

பல்லின சமூக மக்களும் ஒற்றுமையாக இந்த நாட்டில் வாழ்வதற்கான வழிகாட்டல்களை வழங்கும் பொருட்டு உலமாக்கள், புத்திஜீவிகள், கல்வியாளர்கள் போன்ற பலதரப்பினருடன் சேர்ந்து செயற்பட்டவர் அவர்.

சர்வதேச வை.எம்.எம்.ஏ பேரவை, கொழும்பு ஜனாஸா நலன்புரி அமைப்பு போன்றவற்றின் தலைவராக இருந்த மர்ஹூம் அஷ்ரப் ஹுஸைன்,மலையக தொழிற்சங்கத் தலைவர் அஷ்ரப் அஸீஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவர் என்.எம். அமீன் ஆகியோர் உட்பட பலருடன் முக்கியஸ்தர்களுடன் இணைந்து சமூகப் பணிகளில் ஈடுபட்டவர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சிரேஷ்ட உறுப்பினர், செயலாளர், உபதலைவர் என பல பதவிகளை வகித்தவர் மட்டுமன்றி, போரத்தின் மூலம் பல ஊடகவியலாளர்கள் உருவாகக் காரணமாக இருந்தவர்.

நிலாம் கடமையாற்றிய பத்திரிகை நிறுவனங்களில் ஒவ்வொரு ரமழான் காலத்திலும் இப்தார் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து சகவாழ்வுக்கு நிரந்தர அடித்தளம் இட்ட பெருமை அவரையே சாரும்.

கலாபூஷணம், தேசகீர்த்தி என பல சிறப்பு பட்டங்கள் பெற்றவர்.

அவருடைய ஊரான மினுவாங்கொட கல்லொலுவையில் 'தட்டுத் தாவாரம்' எனும் கவிதை நூலினை வெளியிட்டார். இந்நூலின் வெளியீட்டில் ஊரே கலந்து கொண்டது.

நீதி அமைச்சர் அலி சப்ரி,முன்னாள் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில்வேலவர் மற்றும் அரசியல் தலைவர்கள், பத்திரிகை நிறுவனங்களின் ஆசிரியர்கள் என பல முக்கியஸ்தர்களும் சமுகமளித்திருந்தனர். அதை தனது வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நினைவு என்று அவர் கூறுகின்றார்.

பெருநாள் காலங்களில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை மற்றும் தொலைக்காட்சியில் பெருநாள் கவிதைகள் இசைத்து கவிஞர்களை மெருகூட்டியுள்ளார். நல்ல எழுத்தாளர், கவிஞர், நல்ல பண்பாளர், அன்பாக அறிவுரை கூறுவார். யாருடைய செய்திகளிலும் தவறுகளை கண்டால் மென்மையாக சுட்டிக்காட்டி திருத்திக் கொள்ள ஆலோசனைகள் சொல்வார்.

எல்லா மட்டங்களிலும் அவருக்கு ஒரு அலாதியான தனிமதிப்பும் கௌரவமும் இருக்கும். அவர் பிறரை மதிப்பவர். அதனால் அவர் சமூகத்தில் மதிக்கப்பட்டார். அவர் பணிகள் சிறப்பாக மேலும் தொடர அனைவரும் வாழ்த்துவோம்.

-மௌலவி

எஸ்.எம்.எம்.முஸ்தபா...?

(உப செயலாளர்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்