ஒக். 08 இல் ஒன்லைன் மூலம் தொழிற்சந்தை; மன்னார் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

அரச அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல்

ஒக்டோபர் 8 ந் திகதி ஒன் லைன் மூலமாக தொழிற் சந்தை வாரம் நடைபெற இருக்கின்றது. இத்தொழிற் சந்தை மூலம் பல்வேறுபட்ட தொழில்கள் அதாவது வேலை வாய்ப்புக்கள் வழங்குவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதால் படித்துவிட்டு வேலை வாய்ப்புக்காக அலைந்து திரியும் மன்னார் மாவட்ட இளைஞர், யுவதிகள் இதில் பங்குபற்றி பயன் அடையுமாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டீமெல் அறைகூவல் விடுத்துள்ளார்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டீமெல் புதன்கிழமை (22.09.2021) தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின்போது மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் தொழில் வழிகாட்டல் தொடர்பாக தெரிவிக்கையில்,

சுபீட்சத்தை நோக்கிய நாடு என்ற அரசாங்கத்தின் இலக்கை நோக்கிய ஒரு கட்டமாக நாட்டுக்கு சுமையில்லாத உழைக்கும் தலைமுறையை உருவாக்குதல் என்ற தொனியில் மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் ஒக்டோபர் 4ம் திகதியிலிருந்து 10 ந் திகதிவரை தொழில் சந்தை வாரமாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வினை முன்னிட்டு மாணவர்களின் ஆற்றல் திறனை அதிகரிக்கும் நோக்கில் கட்டுரை பேச்சு மற்றும் கவிதை போன்ற போட்டிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.

இதற்கமைய மன்னார் மாவட்டத்திலும் பாடசாலைகள் நடைபெறாத இந்த நிலமையிலும் ஒன் லைனில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் மன்னார் மாவட்ட மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்று வருவதையிட்டு நாம் அவர்களை மிகவும் நன்றியுடன் பாராட்ட வேண்டியதொன்றாகும்.

அதேவேளையில் ஒக்டோபர் 8 ந் திகதி ஒன் லைன் மூலமாக தொழிற் சந்தை வாரம் நடைபெற இருக்கின்றது. இத் தொழிற் சந்தை மூலம் பல்வேறுபட்ட தொழில்கள் அதாவது வேலை வாய்ப்புக்கள் வழங்குவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

ஆகவே படித்துவிட்டு வேலை வாய்ப்புக்காக அலைந்து திரியும் இம் மாவட்ட இளைஞர், யுவதிகள் இதில் பங்குபற்றி பயன் அடையுமாறு இவர்களை நான் கேட்டுக்கொள்ளுகின்றேன்.

இதற்கான மேலதிக தகவல்களை பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் மனித வலு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்களை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என ஊடக சந்திப்பின்போது தெரிவித்தார்.

(தலைமன்னார் விஷேட நிருபர்)