பொத்துவில் வேகாமம் 450 ஏக்கர் காணி விரைவில் விடுவிக்கப்படும்

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.எஸ். முஷர்ரப்

பொத்துவில் -லாகுகல பிரதேசங்களுக்கு இடையிலான எல்லையிடல் தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளும் போது பொத்துவில் பிரதேச வேகாமம் காணிப் பிரச்சினை முதன்மையானது.

வேகாமம் பகுதியில் 1956 களில் விவசாய செய்கைக்காக கொடுக்கப்பட்ட சுமார் 1900 ஏக்கர் வரையிலான காணிகள் 2006 ஆம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வனஜீவராசி திணைக்களத்திற்குரியதாக மாற்றப்பட்டிருந்தன. அதன்பின்னர் இக்காணிகள் தொடர்பாக பல ஆய்வுகள் செய்யப்பட்டிருந்தன.

குறித்த காணிகளில் ஏறத்தாழ 450 ஏக்கர் அளவில் விடுவிக்க முடியும் என்று கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த போது நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (LLRC) கூட பரிந்துரைகளை வழங்கியிருந்தது.

எனவே குறித்த 450 ஏக்கர் விவசாய காணிகளையும் முதலில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அலுவல்கள்சார் அமைச்சினுடைய ஆலோசனைக் குழுக்கூட்டம் கடந்த (21) பாராளுமன்றத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர் அவ் ஆலோசனை குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையில், 2020/12/03ம் திகதிய கூட்ட குறிப்புகளிலிருந்து எழும் விடயங்களில் ஒன்றான லாகுகல - பொத்துவில் வன ஒதுக்கங்களுக்கான எல்லைகளைத் தீர்த்து வைத்தல் மற்றும் அங்குள்ள வயல் நிலங்கள், புல் நிலங்களை விடுவித்தல் சம்பந்தமாக தன்னால் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட கூட்டக் குறிப்பும் ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஏற்கெனவே தான் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக லாகுகல -பொத்துவில் எல்லை நிர்ணயம் குறித்து பொத்துவில் மற்றும் அம்பாறையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கமைய வனஜீவராசிகள் அமைச்சிலிருந்து இந்த எல்லைகளை இடுவது தொடர்பாக நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருந்தது.

நில அளவை திணைக்களத்திற்கும் அந்த எல்லைகளை இடுவது சம்பந்தமாக அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும் நில அளவைத் திணைக்களத்தின் பணிகள் மழையாலும், கொவிட் பெருந்தொற்று காரணமாகவும் தாமதமாகின்றன.

குறித்த எல்லையிடும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் போது, வேகாமம் என்கின்ற காணிப் பிரச்சினை முதன்மையானது. இது தொடர்பாக ஏற்கனவே பல கூட்டங்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. எனவே முதலில் குறிப்பிட்ட 450 ஏக்கர் காணியினை விடுவிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் இக்கூட்டத்தில் அதிகாரிகளை வேண்டிக்கொண்டார்.

அம்பாறை மாவட்ட குறூப் நிருபர்