டயகம சிறுமியின் மரணம்: விசாரணைகளில் முன்னேற்றம்

அமைச்சர் ஜீவனுக்கு DIG விளக்கம்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுடன் மரணமடைந்த டயகம சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் நேற்றைய தினம் தெளிவுபடுத்தியுள்ளார்.

இச்சந்திப்பு தொடர்பில் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தென்னக்கோன்நேற்றைய தினம் தெரிவிக்கையில்: டயகம சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அதுதொடர்பான ஆவணங்களை சட்ட மாஅதிபர் திணைக்களத்துக்கு கையளிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் நேற்றைய இந்த சந்திப்பின்போது குற்றப்புலனாய்வு விசாரணை திணைக்களத்தின் பணிப்பாளரும் கலந்துகொண்டு விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சிறுமியின் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளையடுத்து அதன் கோவைகள் சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு கையளிக்கப்படவுள்ளன. வழக்கின் சந்தேக நபர்களான முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன், அவரது மனைவி, மாமனார், மைத்துனர் மற்றும் சிறுமியை வேலைக்கமர்த்திய தரகர் ஆகியோருக்கெதிராக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி சட்ட மாஅதிபர் திணைக்களம் விசாரணை அறிக்கைகளை ஆராய்ந்து அதற்கமைய அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென்றும் அவர் தெரிவித்தார். அது தொடர்பிலேயே நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு தெளிவுபடுத்திய தாகவும் அவர் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்