மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு கற்பித்தல் நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பியுங்கள்

அமைச்சர் சரத்வீரசேகர ஆசிரியர்களுக்கு அழைப்பு

வடக்கு, கிழக்கில் அனைத்துப் பாடசாலைகளிலும் மற்றும் நாட்டிலுள்ள சர்வதேச பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும் தெற்கில் உள்ள அரசாங்க பாடசாலைகளின் அப்பாவி மாணவர்களே கல்வியைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலுள்ளனர் என தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேக்கர, பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்திற்கொண்டு தயவு செய்து மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்களென அதிபர் ஆசிரியர்களை கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நேற்று முன்தினம் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் என் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. அது தவறானது. அதற்கான முறைப்பாட்டைகுற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்துக்கு வழங்கியதும் ஆசிரியர்களே. தமது பிள்ளைகளுக்கு கல்வி கற்க முற்படுகையில் தமக்கு மரண அச்சுறுத்தல் விடுப்பதாக முறைப்பாடு செய்தவர்கள் ஆசிரியர்களே. மரண அச்சுறுத்தலுக்கு உள்ளான ஆசிரியர்கள் முன்வைத்த முறைப்பாட்டுக் கிணங்க குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் விசாரணை செய்ததில் எந்தவித அரசியலும் கிடையாது என தெரிவித்தார். மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்போருக்கு எதிராக கடும் சட்டங்கள் பிரயோகிக்கப்படுமென்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் எட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். அதேவேளை அரசாங்க ஊழியர்களின் கடமைகளுக்கு தடை ஏற்படுத்துவது கடூழிய சிறைத் தண்டனைக்குரிய குற்றமாகுமென்றும் அவர் எச்சரித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்